2010-09-25 15:43:01

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு தாய் தன் ஐந்து வயது மகளுடன் சென்றார். கடையில் பல பொருட்களை வாங்கிவிட்டு, பணம் செலுத்தும் இடத்திற்குச் சென்றார். அப்பெண் நிறையப் பொருட்களை வாங்கியிருப்பதைக் கண்ட கடைக்காரர், கூடவே சிறுமி இருந்ததைப் பார்த்து, மிட்டாய்கள் இருந்த ஒரு கண்ணாடி ஜாடியைக் காட்டி, "உனக்கு வேண்டிய அளவு நீயே மிட்டாய்களை எடுத்துக்கொள்." என்றார். சிறுமி தயங்கி நின்றாள். "உனக்கு மிட்டாய் பிடிக்காதா?" என்று கேட்ட கடைக்காரரிடம், "எனக்கு மிட்டாய் மிகவும் பிடிக்கும்." என்று சொன்னாள். ஒருவேளை சிறுமி மிட்டாய்களை எடுக்க வெட்கப்படுகிறாள் என்று எண்ணியக் கடைக் காரர், அந்த ஜாடிக்குள் அவரே கைவிட்டு, கை நிறைய மிட்டாய்களை எடுத்துக் கொடுத்தார். சிறுமி இருகைகளிலும் அம்மிட்டாய்களைப் பெற்றுக் கொண்டார். தாயும், மகளும் வெளியே வந்ததும், "கடைக்காரர் மிட்டாய் எடுத்துக் கொள்ளச் சொன்னபோது, ஏன் நீ எடுக்கவில்லை?" என்று தாய் கேட்டார். அதற்கு, அந்தச் சிறுமி ஒரு குறும்புப் புன்னகையுடன், "என் கையைவிட கடைக்காரர் கை பெரிதாக இருந்தது, அதனால்தான்." என்று பதில் சொன்னாள்.
அந்தச் சிறுமியைத் தந்திரக்காரி, பேராசைப் பிடித்தவள் என்றெல்லாம் தீர்ப்புக்களை எழுதுவதற்கு முன், நாம் குற்றவாளிக் கூண்டில் ஏறி நிற்க வேண்டும். ஆம் அன்பர்களே, அச்சிறுமிக்கு இப்படி ஓர் எண்ணம் எங்கிருந்து வந்திருக்கும் என்பதை சிந்திக்கும் போது, வயது வந்தவர்கள், வளர்ந்தவர்கள் என்று கூறிக் கொள்ளும் நாம் அனைவரும் இந்த எண்ணங்களை அந்தக் குழந்தையின் உள்ளத்தில் விதைத்திருக்க வேண்டும் என்பதை உணர வேண்டும். அச்சிறுமியின் பெற்றோரை, குடும்பத்தை மட்டும் நான் இங்கு குறை கூறவில்லை. இன்றைய ஒட்டுமொத்த சமுதாயமும் இப்படிப்பட்ட எண்ணங்களைக் குழந்தைகள் மனங்களில் வளர்ப்பதற்குப் பொறுப்பேற்று, குற்றவாளிக் கூண்டில் ஏறி நிற்க வேண்டும்.
நாம் அந்தக் குற்றவாளிக் கூண்டில் நிற்கும் போது, இறைவனின் தீர்ப்பு ஒலிக்கும். இறைவன் நமது தன்னலம், பகிராத் தன்மை பற்றி கூறும் தீர்ப்பை இன்றைய திருவழிபாட்டின் முதல் வாசகம் நமக்கு அழுத்தந்திருத்தமாய்க் கூறுகிறது:

ஆமோஸ் 6 : 1, 3-7
சீனோன் குன்றின்மீது இன்பத்தில் திளைத்திருப்போரே! சமாரியா மலைமேல் கவலையற்றிருப்போரே! மக்களினங்களுள் சிறந்த இனத்தின் உயர்குடி மக்களே! இஸ்ரயேலின் மக்கள் தேடி வருமளவுக்குப் பெருமை வாய்ந்தவர்களே! உங்களுக்கு ஐயோ கேடு!
தீய நாளை இன்னும் தள்ளிவைப்பதாக நீங்கள் நினைக்கின்றீர்கள்: ஆனால் வன்முறையின் ஆட்சியை அருகில் கொண்டு வருகின்றீர்கள். தந்தத்தாலான கட்டிலில் பஞ்சணைமீது சாய்ந்து கிடப்போருக்கும் கிடையிலிருந்து வரும் ஆட்டுக் குட்டிகளையும் மந்தையிலிருந்து வரும் கொழுத்த கன்றுகளையும் உண்போருக்கும் ஐயோ கேடு! அவர்கள் வீணையொலி எழுப்பி அலறித் தீர்க்கின்றார்கள், தாவீதைப்போல புதிய இசைக்கருவிகளைக் கண்டுபிடிக்கின்றார்கள். கோப்பைகளில் திராட்சை இரசம் குடிக்கின்றார்கள்: உயர்ந்த நறுமண எண்ணெயைத் தடவிக்கொள்கின்றார்கள். ஆகையால் அவர்கள்தான் முதலில் நாடு கடத்தப்படுவார்கள்: அவர்களது இன்பக் களிப்பும் இல்லாதொழியும். 
நான் கடினமாய் உழைத்தேன், சம்பாதித்தேன்... அல்லது, என் தந்தை, பாட்டனார் காலத்துச் சொத்துக்கள் எனக்கு வந்து சேர்ந்துள்ளன. அவைகளை நான் அனுபவிக்கிறேன். இதில் ஒன்றும் தவறில்லையே? என்ற கேள்வி எழும். தவறு இல்லை. இந்த உலகத்தில் நான் மட்டுமே, எனதுக் குடும்பம் மட்டுமே வாழ்ந்து வந்தால், என் சொத்துக்களை நான் அனுபவிப்பதில் எந்தத் தவறும் இல்லைதான். ஆனால், "அடுத்தவர்" என்ற அந்த உண்மை என் வாழ்வில், என் உலகத்தில் எப்போது நுழைகிறதோ, அப்போது, எல்லாமே மாறும்.
அன்று இயேசுவிடம் சாமார்த்தியமான கேள்வி கேட்பதாக எண்ணி, எனக்கு அடுத்தவர், என் அயலவர் யார் என்று கேட்ட அந்த அறிவாளியைப் போல் நாம் இந்த அடுத்தவரைப் பற்றி கேள்விகள் எழுப்ப வேண்டாம். தேவையில் இருப்பவர் எல்லாருமே நமது அடுத்தவர், அயலவர். இவர்களுக்கு மறு பெயர் ஏழைகள். சென்ற வார ஞாயிறு சிந்தனையின் இறுதியில் நான் சொன்ன வரிகளை மீண்டும் நினைவுபடுத்துகிறேன்:
ஏழைகளை எவ்வாறு நண்பர்களாக்குவது, அல்லது குறைந்த பட்சம் எப்படி அவர்களை மரியாதையாய் நடத்துவது என்பதை அடுத்த ஞாயிறு சிந்தனைக்குரிய நற்செய்தி நமக்குத் தெளிவு படுத்தும். 
ஏழைகளிடம் எவ்வாறு நடந்து கொள்வது, அவர்களை எப்படி மதிப்பது, மதிக்கவில்லையெனில் என்ன நடக்கும் என்பதையெல்லாம் இன்றைய நற்செய்தி நமக்கு விளக்குகிறது. 'செல்வரும் லாசரும்' என்ற இந்த உவமை இயேசுவின் பிரபலமான உவமைகளில் ஒன்று. இவ்வுவமை ஒரு வைரத்தைப் போல் திரும்பிய பக்கமெல்லாம் வெவ்வேறு வண்ணத்தில் வெவ்வேறு ஒளி தரும். இந்த வைரச் சுரங்கத்தை முழுவதும் தோண்டி எடுக்க நேரம் இல்லாததால், இந்த உவமையின் முதல் வரிகளில் மட்டும் நமது சிந்தனைகளைச் செலுத்தி, முடிந்த வரைப் பாடங்களைப் பயில்வோம்.
லூக்கா நற்செய்தி 16 : 19-21 வரை மூன்று வசனங்களில் கதையின் இரு நாயகர்களை இயேசு விவரிக்கின்றார்.




செல்வரைப் பற்றி மூன்று விவரங்கள். ஏழையைப் பற்றி ஐந்து விவரங்கள். இந்த எட்டு விவரங்களில் மூன்று ஒப்புமைகளை இயேசு காட்டுவதைப் பார்க்கலாம். பாடங்கள் பல சொல்லும் ஒப்புமைகள் இவை.
“செல்வர் ஒருவர் இருந்தார். லாசர் என்ற பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார்...” இயேசுவின் இந்த முதல் வரிகளைக் கேட்டதும், யூதர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பார்கள். செல்வருக்குப் பெயரில்லை. ஆனால், ஏழைக்கு இயேசு பெயர் கொடுத்தார். பெயர் கொடுத்ததால் கூடுதல் மதிப்பும் கொடுத்தார். இயேசு கூறிய அனைத்து உவமைகளிலும் இந்த ஓர் உவமையில் மட்டுமே கதாபாத்திரத்திரத்திற்குப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. வேறு எந்த உவமைக்கும் இல்லாத ஒரு தனிச் சிறப்பு இது.
செல்வங்கள் பெறுவதை இறைவனின் ஆசீராகவும், வறுமை, ஏழ்மை இவைகளை இறைவனின் சாபமாகவும் எண்ணி வந்த இஸ்ராயலர்கள் மனதில் இயேசு ஏழைக்கு கொடுத்த மதிப்பு அதிர்ச்சியைத் தந்திருக்கும். கடவுள் எப்போதும் ஏழைகள் பக்கம்தான் என்பதை வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் இயேசு வலியுறுத்தி வந்தார். இந்த உவமையில் ஏழைக்கு லாசர் என்ற பெயர் கொடுத்து, இந்த உண்மையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஏழைகளைத் தாழ்வாக எண்ணி வந்த இஸ்ராயலர்கள் மேல் அவசரப்பட்டு கண்டனம் சொல்ல வேண்டாம். இதே மனநிலைதானே இன்று நம்மிடையே உள்ளது! ஒரு செல்வரைப் பற்றி பேசும் போது, திருவாளர் இவர், திருவாளர் அவர் என்றெல்லாம் பேசுகிறோம். ஏழைகளைக் குறிப்பிடும் போது, பொதுவாக அவர்களை ஓர் எண்ணிக்கையாகக் குறிப்பிடுகிறோம். “திருவாளர் திலகரத்தினம் இன்று நடத்திய தண்ணீர் பந்தலுக்கு நூற்றுக் கணக்கான ஏழைகள் வந்தனர்” என்பது தானே நமது பேச்சு வழக்கு? ஏழைகளை எண்ணிக்கைகளாக இல்லாமல், மனிதப் பிறவிகளாக மதிக்க வேண்டும் என்பதற்கு இந்த முதல் வரி நல்லதொரு பாடம்.

செல்வரையும், லாசரையும் குறித்து இயேசு கூறும் அடுத்த வரிகள்: செல்வர் மெல்லிய ஆடை அணிந்திருந்தார்; இன்னும் குறிப்பாக, செந்நிற மெல்லிய ஆடை அணிந்திருந்தார் என்றும்... லாசரின் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது என்றும் இயேசு கூறுகிறார். மனதில் ஆணிகளை அறையும் வரிகள்... செல்வர் அணிந்திருந்த மெல்லிய செந்நிற ஆடை ஒருவேளை அவரது உடலோடு ஒட்டியதாக, ஏறக்குறைய அவரது தோலைப் போல் இருந்திருக்கலாம். லாசாரோ, உடலெங்கும் புண்ணாகி, அவரும் சிவப்புத் தோலுடன் இருந்திருப்பார்.
அரசப் பரம்பரையைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் நிறம் சிவப்பு. செல்வர் தன்னைத் தானே ஓர் அரசனாக்கும் முயற்சியில் செயற்கையாகச் செய்யப்பட்ட செந்நிற ஆடை அணிந்திருந்தார். லாசாரோ உடலெங்கும் புண்ணாகி, இயற்கையிலேயே செந்நிறமாய் இருந்தார். சிலுவையில் செந்நிறமாய்த் தொங்கிய இயேசுவின் முன்னோடியாக இவரைப் பார்க்கலாம். யார் உண்மையில் அரசன்?

மூன்றாவது ஒப்புமை வரிகள் உள்ளத்தில் அறையப்பட்ட ஆணிகளை இன்னும் ஆழமாய் அறைகின்றன.

செல்வர் மறு வாழ்வில் நரக தண்டனை பெற்றதற்கு இந்த வரிகள் காரணங்களாகின்றன. நரக தண்டனை பெறுமளவு அந்தச் செல்வனின் தவறுதான் என்ன? அவர் உண்டு குடித்து மகிழ்ந்தார். அதனால்... ஒருவர் உண்டு குடித்து மகிழ்வதால் நரகமா? இது கொஞ்சம் மிகையானத் தண்டனையாகத் தெரிகிறது. அன்பர்களே, அவர் உண்டு குடித்ததற்காக இந்த தண்டனை கிடையாது... அவருக்கு முன் தேவையுடன் ஒருவர் இருந்தபோது, அவருடைய தேவையைப் போக்க எந்த வகையிலும் முயற்சி எடுக்காமல், நாள் தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தாரே... அதற்காக இந்த தண்டனை.
ஓர் ஏழையைத் தன் வீட்டு வாசலில் விட்டுவைத்ததற்காக அவரைப் பாராட்ட வேண்டாமா? அந்தச் செல்வர் நினைத்திருந்தால், லாசரைத் தன் வீட்டு வாசலிலிருந்து விரட்டி இருக்கலாம். காவலாளிகள் உதவியுடன் லாசரைத் தன் கண்களில் படாத வண்ணம் செய்திருக்கலாம். இப்படி எதுவும் செய்திருந்தால் ஒருவேளை குறைந்த தண்டனை கிடைத்திருக்குமோ என்று கூட நான் எண்ணிப் பார்க்கிறேன். புதிராக உள்ளதா? விளக்குகிறேன்.
லாசர் மீது ஏதாவது ஒரு நடவடிக்கை எடுத்திருந்தால்... அது வெறுப்பைக் காட்டும் நடவடிக்கையாக இருந்திருந்தாலும் பரவாயில்லை, லாசர் என்ற ஒரு ஜீவன் அங்கு இருக்கிறது என்பதையாகிலும் அந்த செல்வர் உணர்ந்திருப்பார். இந்த உவமையில் கூறப்பட்டுள்ள செல்வந்தனைப் பொறுத்த வரை, லாசரும் அவர் வீட்டில் இருந்த ஒரு மேசை, நாற்காலியும் ஒன்றே... ஒருவேளை அந்த மேசை நாற்காலியாவது தினமும் துடைக்கப்பட்டிருக்கும். மேசை நாற்காலியைத் துடைக்கும் துணியை விட கேவலமாக அவர் செல்வரது வாயிலருகே கிடந்தார். “அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகேக் கிடந்தார்” என்று இயேசு அழுத்தமாகக் குறிப்பிடுகிறார். செல்வந்தனைப் பொறுத்த வரை, அவரது காலடியில் மிதிபட்ட மண்ணும் லாசரும் ஒன்று.
ஒருவர் மீது அன்பையோ, வெறுப்பையோ காட்டுவது அவர் ஒரு மனிதப் பிறவி என்பதையாவது உறுதிப்படுத்தும் ஒரு நிலை. ஆனால், ஒருவரை குறித்து எந்த உணர்வும் காட்டாமல் இருப்பது, அவர் ஒரு மனிதப் பிறவியே இல்லை என்பதைப் போல ஒருவரை நடத்துவது மிகவும் கொடிய ஒரு போக்கு. இதைத்தான் அந்த செல்வர் செய்தார். அந்தத் தெருவில் அலைந்த நாய்கள் கூட லாசரை ஒரு பொருட்டாக மதித்தன என்பதையும் இயேசு இந்த மூன்றாம் ஒப்புமையில் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்.
 வான் வீட்டில் நுழைவதற்கு ஏழைகளை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள் என்று போன வாரம் இயேசு எச்சரித்தார். நண்பர்களாக்கிக் கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை, அவர்களை மனிதப் பிறவிகளாகக் கூட நடத்த மறுத்தால், நரகம்தான் கிடைக்கும் என்பதை இன்று இயேசு தெளிவுபடுத்துகிறார். செல்வர் நரக தண்டனை பெற்றது அவருக்குத் தரப்பட்ட ஒரு பாடம். லாசரை ஒரு மனிதப் பிறவியாகக் கூட கருதாமல் செல்வர் லாசருக்கு உருவாக்கிய அந்த நரகம் எப்படி இருக்கும் என்பதை அவரே உணர வேண்டும் என்பதற்காகக் கடவுள் தந்த பாடம் இந்த மறு வாழ்வு நரகம். இதற்கு மேலும் தெளிவான பாடங்கள் நமக்குத் தேவையா, அன்பர்களே?







All the contents on this site are copyrighted ©.