2010-09-25 15:53:36

இன்றைய இளையோரில் நாளைய விடியலைக் காண்பதில் மகிழ்ச்சி - திருத்தந்தை


செப்.25,2010. இன்றைய இளையோரில் நாளைய விடியலைத் தான் காண்பதில் மகிழ்ச்சியடைவதாகக் கூறிய அதேவேளை கடவுளின் பராமரிப்பில் நம்பிக்கை வைத்து வருங்காலத் தலைமுறைகளின் நலனில் அக்கறை காட்டுமாறு பிரேசில் ஆயர்களிடம் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை பாப்பிறையைச் சந்திக்கும் அட் லிமினாவை முன்னிட்டு இச்சனிக்கிழமை காஸ்தெல் கந்தோல்போவில் பிரேசில் நாட்டு கிழக்குப் பகுதியின் ஆயர்களில் ஒரு குழுவினரைச் சந்தித்த போது இவ்வாறு கூறினார்.
நாளைய விடியலின் நம்பிக்கைகளான இளையோரை உருவாக்குவதில் கவனம் செலுத்துமாறு வலியுறுத்திய அவர், உரோமையில் இரண்டாயிரமாம் ஆண்டில் இடம் பெற்ற இளையோர் கொண்டாட்டத்தின் போது பல இளையோர் ஒப்புரவு அருட்சாதனத்தில் பங்கு பெற்றதை நினைவுபடுத்தினார்.
உண்மையான மாற்றத்தின் மையமாக விளங்கும் மன்னிப்பு, மனிதனைச் சீர்படுத்தவும் சமூகத்தைப் புதுப்பிக்கவும் முக்கியமானதாக அமைகின்றது என்றும் திருத்தந்தை பிரேசில் ஆயர்களிடம் விளக்கினார். ஆயர்கள் தங்கள் பணிகளைத் தங்களது சொந்த வல்லமையால் மட்டும் செய்ய முடியாது, மாறாக அவற்றிற்குத் தூய ஆவியிடமிருந்து கிடைக்கும் ஒளியும் அருளும் அவசியம் என்றும் திருத்தந்தை தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.