2010-09-24 15:40:30

வேலையும் கொண்டாட்டமும் குடும்பங்களின் வாழ்வில் மிக ஆழமானத் தொடர்பு கொண்டவை - திருத்தந்தை


செப்.24,2010. “குடும்பம் : வேலையும் கொண்டாட்டமும்” என்ற தலைப்பில் 2012ம் ஆண்டு மே 30 முதல் ஜூன் 3 வரை மிலானில் நடைபெறவிருக்கும் ஏழாவது உலகக் குடும்பங்கள் மாநாட்டின் தயாரிப்புக்களுக்கு வாழ்த்துச் சொல்லி செய்தி அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

திருப்பீட குடும்ப அவைத் தலைவர் கர்தினால் என்னியோ அந்தோனெல்லிக்கு இச்செய்தியை அனுப்பியுள்ள திருத்தந்தை, வேலையும் கொண்டாட்டமும் குடும்பங்களின் வாழ்வில் மிக ஆழமானத் தொடர்பு கொண்டவை என்று கூறியுள்ளார்.

எனினும், போட்டிச் சந்தை, அதிகப்பட்ச இலாபம் ஆகியவற்றின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட இன்றைய வேலையின் அமைப்பு, குடும்பங்களும் சமூகமும் பிரிவதற்கும் தனித்துவ வாழ்க்கை முறை பரவுவதற்கும் உதவுகின்றன என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, விழாக்களின் குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமைகள், உயிர்ப்பு வாரம், நம் ஆண்டவரின் நாள், குடும்ப நாள் போன்றவற்றின் உண்மையான அர்த்தம் குறித்துச் சிந்திக்க அழைப்பு விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மிலானில் நடைபெறவிருக்கின்ற உலகக் குடும்பங்கள் சந்திக்கும் மாநாடு, திருச்சபையிலும் சமுதாயத்திலும் நன்றாகத் தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டு ஒன்றிணைந்து வாழும் குடும்பங்களின் கண்ணோட்டத்தில் வேலை மற்றும் விழாக்களை மீண்டும் சிந்தித்துப் பார்ப்பதற்கு மிகச் சிறந்த வாய்ப்பாக அமையும் என்றும் அச்செய்தி கூறுகிறது.

ஐந்து நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் சனிக்கிழமை மாலை விழா, ஞாயிறு காலைத் திருப்பலி ஆகிய இவையிரண்டில் கடவுளுக்கு விருப்பமானால் தான் கலந்து கொண்டு இத்தலைப்பு குறித்த இன்னும் விரிவான தகவல்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும் திருத்தந்தை அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்







All the contents on this site are copyrighted ©.