2010-09-24 15:45:28

இலங்கையின் 18ஆவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக கிறிஸ்தவர்கள் நடவடிக்கை


செப்.24,2010. இலங்கையில் அண்மையில் கொண்டு வரப்பட்டுள்ள அரசுத் தலைவருக்கு அதிகமான அதிகாரங்களை வழங்கும் 18 ஆவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் கிறிஸ்தவர்களை முடுக்கி விடுவதற்கு அந்நாட்டுத் தலத்திருச்சபை நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் குருக்களும் அருட்சகோதரிகளும் பொதுநிலையினரும் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்துப் பேசிய, இந்தக் கிறிஸ்தவத் தோழமை இயக்கத்தை நடத்தும் அருள்திரு Sarath Iddamalgoda, இலங்கையில் எல்லா அரசியல் அதிகாரமும் ஒரே ஒருவரில் அல்லது ஒரு சிலரின் கைகளில் முடங்கிப்போவதன் எதிர்விளைவை அந்நாட்டினர் விரைவில் அல்லது பின்னாளில் உணரத் தொடங்குவார்கள் என்று கூறினார்.

இந்தச் சட்டச்சீர்திருத்தத்தைக் கொண்டு வந்திருப்பதன் மூலம் மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்குத் தடைவிதிப்பது ஜனநாயகத்திற்குப் புறம்பானது என்றும் அக்குரு குறை கூறினார்.

கிறிஸ்தவர்களின் இந்நடவடிக்கைக் குறித்துப் பேசிய ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபைக் குரு மாரிமுத்துப்பிள்ளை சக்திவேல்(Marimuthupillai Sathivel), 18 தடவைகள் சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ள அரசியல் அமைப்பை செம்மைப்படுத்துவதற்கு எல்லா மக்களையும் ஒருங்கிணைத்தப் பொதுவான திட்டம் தேவை என்றார்.

18ஆவது அரசியலமைப்புச் சட்டமானது ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த 17 ஆவது அரசியமைப்புத் திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்கின்றது. அத்துடன் தேர்தல் ஆணையாளர், மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு, பொதுச் சேவை, பொலிஸ் சேவை ஆகியவற்றிற்கான உறுப்பினர்களை நியமிப்பதற்குப் பொறுப்பாக இருந்து வந்த அரசியலமைப்புச் சபைக்குப் பதிலாக பாராளுமன்ற சபை என்ற சபையை நியமிப்பதற்கு 18 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் வழி வகுத்திருக்கின்றது.







All the contents on this site are copyrighted ©.