2010-09-23 13:52:51

செப்டம்பர் 24 நாளும் ஒரு நல்லெண்ணம்


இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தியில் பிரச்னைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தமானது என்பது தொடர்பான வழக்கிற்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கவிருக்கும் தீர்ப்பு குறித்து நாடே பரபரப்பானச் சூழலில் இருக்கின்றது. இந்தத் தீர்ப்புச் சாதகமாக இருந்தாலும் சரி, பாதகமாக இருந்தாலும் சரி முஸ்லீம்கள் அமைதி காக்க வேண்டும் என்று முஸ்லிம் மத தலைவர்கள் தங்கள் மதத்தினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்து அமெரிக்கன் பவுண்டேஷன் நிறுவனர்களில் ஒருவரான மிஹிர் மெகானி என்பவரும் இந்தத் தீர்ப்பு எல்லாரையும் திருப்திபடுத்த இயலாமல் போகலாம். எனவே இந்த விடயத்தில் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தைக் காப்பதில் மதத் தலைவர்கள் சிறப்பாகச் செயல்பட்டு பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று கேட்டுள்ளார். இவ்வாறு கிறிஸ்தவர்கள் உட்பட எல்லா மதங்களின் தலைவர்களும் இந்நாளில் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகக் கடவுளைப் பிரார்த்திக்குமாறும் தங்கள் மதத்தினரைக் கேட்டுள்ளனர். செப்டம்பர் 24ம் தேதி இவ்வெள்ளிக்கிழமை வழங்கப்படவிருந்த இந்தத் தீர்ப்பை செப்டம்பர் 28 வரை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு விடுத்திருப்பதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது. ஆயினும் இது தொடர்பாகப் பதட்டநிலைகள் உருவாகியுள்ளதை மறுக்க முடியாது.

ஆம். மத, இன, கட்சிப் பேதமின்றி எல்லாரும் விரும்புவது அமைதி. நல்லிணக்கம். அச்சமற்ற வாழ்வே உச்சமான வாழ்வு.








All the contents on this site are copyrighted ©.