2010-09-23 15:40:46

அணு சக்தியை அமைதிக்கும் மக்கள் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்துமாறு திருப்பீடம் அழைப்பு


செப்.23, 2010. உலகின் அனைத்து நாடுகளும் அணு சக்தியைப் போருக்கும் அழிவுக்கும் பயன்படுத்துவதை விடுத்து, அமைதிக்கும் மக்கள் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்துமாறு திருப்பீடம் அழைப்பு விடுத்துள்ளது.
இத்திங்கள் முதல் வெள்ளி வரை வியென்னாவில் நடைபெறும் 54வது அகில உலக அணு சக்திக் குழுவின் உயர்மட்டக் கூட்டத்தில் செவ்வாயன்று பேசிய திருப்பீடத்தின் நாடுகளுக்கிடையேயான உறவுகளின் துணைச் செயலர் பேரருள்திரு Ettore Balestrero இவ்வாறு கூறினார்.
அணு சக்தியை அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்தும் போது, நல்ல குடி நீர் வசதி, அதிகப் பலன் தரும் வேளாண்மை, சுற்றுச் சூழலைப் பேணுதல் போன்ற உலகின் மிக அவசரத் தேவைகளை நம்மால் நிறைவேற்ற முடியும் என்று பேரருள்திரு Balestrero கூறினார்.
குழந்தைகளின் பசியை நீக்குதல், நோய்களைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை இந்த அவசரத் தேவைகளில் மிக முக்கியமானதென சுட்டிக் காட்டிய துணைச் செயலர், புற்று நோயை குணமாக்க பயன்படும் கதிரியக்கத்திற்கு அணு சக்தியை இன்னும் அதிகமாகப் பயன்படுத்தலாம் என்பதைக் குறிப்பிட்டுப் பேசினார்.அமைதி வழியில் மனித முன்னேற்றத்தை வளர்க்கும் முயற்சிகளுக்குத் திருப்பீடம் எப்போதும் துணை நிற்கும் என்பதைத் தன் உரையில் வலியுறுத்தினார் துணைச் செயலர் பேரருள்திரு Ettore Balestrero.







All the contents on this site are copyrighted ©.