2010-09-21 16:22:24

விவிலியத் தேடல்


RealAudioMP3
"ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்."
என்ற 23ம் திருப்பாடலின் முதல் இரு வரிகளில் நம் சிந்தனைகளை இதுவரைப் பகிர்ந்தோம். இன்று இத்திருப்பாடலின் அடுத்த வரியில் நம் சிந்தனைகளை ஆரம்பிக்கிறோம். "அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்."
அமைதியான நீர்நிலைகள்... என்ற வார்த்தைகள் நீரைக் குறித்து நம்மை இன்று சிந்திக்க அழைக்கின்றன.

1887ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள்... 21 வயது இளம் பெண் 6 வயது சிறுமியை ஒரு நீர்க் குழாய் அருகே அழைத்துச் சென்றார். அழைத்துச் சென்றார் என்பதை விட இழுத்துச் சென்றார் என்று சொல்லலாம். அந்தச் சிறுமி பல வகையிலும் இளம் பெண்ணின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க மறுத்தார். இருந்தாலும், அந்த இளம் பெண் விடுவதாக இல்லை. அந்தச் சிறுமியின் கைகளைக் குழாயடியில் நீட்டவைத்து, அவைகள் மேல் தண்ணீர் விழும்படிச் செய்தார். பின்னர் W A T E R 'தண்ணீர்' என்ற ஆங்கில வார்த்தையின் எழுத்துக்களை அந்தப் பெண்ணின் உள்ளங்கையில் எழுதினார். அதுவரைப் பலவகையிலும் அடம்பிடித்த அந்தச் சிறுமியின் முகத்தில் ஒளி தோன்றியது. அந்தக் குழாயடியில் ஒரு புதுமை ஆரம்பமானது.
அந்தச் சிறுமியின் பெயர்... ஹெலன் கெல்லர். அவருக்கு வார்த்தைகள் சொல்லித் தந்த இளம் பெண்... Anne Sullivan.
தன் இரண்டாவது வயதில் வந்த ஒரு கொடிய காய்ச்சலால் கேட்கும் திறனையும், பார்க்கும் திறனையும் இழந்த குழந்தை ஹெலன் கெல்லர், சிறிது சிறிதாக பேசவும் மறந்து இருளும், அமைதியும் மண்டிக் கிடந்த ஓர் உலகத்தில் தன்னையே புதைத்துக் கொண்டாள். அவளை அந்தச் சிறையிலிருந்து விடுவிக்க Anne Sullivan ஒரு மாதமாக மேற்கொண்ட பல முயற்சிகளிலும் அவர் தோல்வியையே கண்டார். ஹெலன் நாளுக்கு நாள் கோபத்தில் மட்டும் வளர்ந்து வந்தாள். அன்று அந்தக் குழாயடியில், கொட்டும் நீர் வழியாக, Anne Sullivan ஹெலன் வாழ்வில் புதுமைகளைப் புகுத்தினார். ஆறு வயதில் ஆரம்பித்த இந்தப் புதுமை, ஹெலன் கெல்லர் வாழ்வில் தொடர்ந்தது. புலன் திறமை இழந்த பலருக்கு ஹெலன் கெல்லர் ஒரு புதுமையாக மாறினார். ஹெலன் வாழ்வில் மட்டுமல்ல, பலரது வாழ்வில் தண்ணீர் பல்வேறு பாடங்களைச் சொல்லித் தந்த வண்ணம் உள்ளது. தண்ணீர் சொல்லித் தரும் பாடங்களை இன்று கற்றுக் கொள்ள முயல்வோம்.
தண்ணீரைப்பற்றி Tao Cheng என்ற ஞானி எழுதிச் சென்றுள்ள சில வரிகளை ஒரு சிறு தியானமாக மேற்கொள்வோம்.
தண்ணீர் சொல்லித் தரும் பாடங்கள் எண்ணற்றவை, ஆழமானவை.
அலைகளெனும் தூரிகையால் உலகக் கண்டங்களின் எல்லைகளை ஒவ்வொரு நாளும் மாற்றி வரைவது தண்ணீர்தானே.
தண்ணீர் மிகவும் மென்மையானது; ஆனால், அனைத்தையும் வெல்வது.
தண்ணீர் நெருப்பை அணைத்துவிடும். அணைக்க முடியாத வண்ணம் எரியும் நெருப்பிலிருந்து தண்ணீர் தப்பித்துச் செல்லும் நீராவியாக. தப்பித்த நீராவி மீண்டும் சேர்ந்துவிடும் மேகமாக.
மென்மையான மணலை அடித்துச் செல்லும் தண்ணீர், பாறைகளுக்கு முன் பணிந்து விடும். பாறைகளைச் சுற்றி ஓடிவிடும்.
பாறைகளுக்கு முன் பணிந்து விடும் அதே தண்ணீர், இரும்புக்குள் ஈரமாய்ப் புகுந்து, இரும்பைத் துருவாக்கி, கரைத்துவிடும்.
விண்வெளியில் தண்ணீர் துளிகளாய் நிறைந்து, வீசும் காற்றையும் நிறுத்தி, வான் வெளியை மௌனமாக்கி விடும்.
எந்த ஒரு தடை வந்தாலும் சமாளித்து ஓடும் தண்ணீர் கடலை அடைவது உறுதி.
தண்ணீர் சொல்லித் தரும் பாடங்கள் எண்ணற்றவை, ஆழமானவை. 
"அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்."
நீரைக் குறித்து உங்களுக்கு எவ்வளவு விவரங்கள் தெரியும், தெரியாது என்பது எனக்குத் தெரியாது. ஆனால், 23ம் திருப்பாடலின் இந்த வரியை நான் வாசித்ததும் நீரைக் குறித்து விவரங்களைத் தேடினேன். இணையதளத்தில் நான் கண்ட விவரங்களிலிருந்து ஒரு சில கருத்துக்களை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நாம் வாழும் உலகின் மேல் பரப்பில் 70.8 விழுக்காடு (36.1 கோடி சதுர கிலோ மீட்டர் அல்லது 13.9 கோடி சதுர மைல்) பரப்பளவு பெருங்கடல்களால் நிறைந்தது. 30 விழுக்காட்டுக்கும் குறைவானதே நிலப்பரப்பு. (அதாவது 15 கோடி சதுர கிலோ மீட்டருக்கும் குறைவானது.) பெருங்கடல்களின் சராசரி ஆழம் 3.8 கிலோ மீட்டர். ஒரு சில இடங்களில் கடலின் ஆழம் 10 கிலோ மீட்டருக்கும் மேல் உள்ளது. இவை எல்லாமே உப்பு நீர். நம் நிலப்பகுதியில் ஆறுகள், ஏரிகள், குளங்கள் என்று பல வடிவங்களில் நல்ல நீர் உள்ளது. இவை அல்லாமல், நிலத்தடி நீரும் உள்ளது.
நாம் வாழும் உலகில் நம்மைச் சுற்றிலும் நல்ல நீர், உப்பு நீர்... நமக்குக் கீழ் நிலத்தடி நீர். நமக்கு மேல் விண்வெளி நீர். எனவே ஒரு வகையில் கற்பனை செய்து பார்த்தால், நீர் சூழ்ந்த ஒரு மகாப் பெரும் கடலில் இந்த உலகமே நீந்தி வருகிறது. அந்த உலகத்தோடு நாமும் இந்தக் கடலில் நீந்தி வருகிறோம், அல்லது இந்தக் கடலில் மிதந்து மகிழ்கிறோம் என்று சொல்வது மிகையான கற்பனை அல்ல.

அன்புள்ளங்களே, வெளி உலகம் நீரால் நிறைந்துள்ளதைப் போல், நமது உள் உலகமும் நீரால் நிறைந்துள்ளது. நாம் பிறக்கும் முன் தாயின் உதரத்தில் எப்போதும் நீரால் சூழப்பட்டிருந்தோம். அந்த நீரில்தான் நம்முடைய உடல் உருவானது. குழந்தைகளின் உடலில் 75 விழுக்காடு நீரால் ஆனது. நன்கு வளர்ந்துள்ள மனித உடலில் 55 முதல் 60 விழுக்காடு நீரால் ஆனது. மனித மூளையில் 75 விழுக்காடு, மனித எலும்புகளில் 25 விழுக்காடு, மனித இரத்தத்தில் 83 விழுக்காடு என்ற அளவு நீர் நமது உடலில் உள்ளது. ஒரு சராசரி மனிதன் உணவின்றி ஒரு மாதம் உயிர் வாழ முடியும். ஆனால், நீரின்றி ஒரு வாரம் கூட உயிர் வாழ முடியாது.
நீருக்கும் உயிருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. விண்வெளி ஆய்வை மேற்கொள்பவர்கள் எந்த ஒரு கோளத்திலும் உயிரினம் இருக்கிறதா என்பதை ஆராயும் போது, அந்தக் கோளத்தில் நீர் இருக்கிறதா என்பதைத்தான் முதலில் கண்டு பிடிக்கிறார்கள். நீர் இருந்தால், அங்கு உயிர் இருக்கும் என்பது அறிவியல் கணிப்பு.  அங்கிங்கெனாதபடி எல்லாவிடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் கடவுளை நினைவுறுத்தும் வண்ணம் நம்மைச் சூழ்ந்திருக்கும் நீரை கற்பனையாய் எண்ணி ஒரு சிறு தியானத்தோடு இன்றையத் தேடலை நிறைவு செய்வோம்.
பசும் புல் வெளியை மனக் கண்ணால் கண்டோம். அங்கு வீசிய தென்றலை மனத்தால் உணர்ந்தோம். அங்கு ஆயன் வாசித்த புல்லாங்குழலை கேட்டோம். அதே போல், இப்போது கற்பனையில் கொட்டும் மழையில் நனைவோம், அல்லது கொட்டும் அருவிக்கடியில் நிற்போம். தலை முதல் கால் வரை நம்மைக் குளிர வைக்கும் அந்த நீருக்கு நன்றி சொல்வோம். நம்மேல் உள்ள அழுக்கை நீக்கி நம்மைத் தூய்மையாக்கும் நீருக்கு நன்றி சொல்வோம். தண்ணீரின் குளிர் நமது உடலெங்கும் பரவி நிரப்புவதை உணர்வோம். நம்மைக் கழுவி, குளிர்வித்து, மகிழ வைக்கும் அந்த நீரைப் போல, ஆயனாம் இறைவனும் நம் உள்ளம் எழுந்து நம்மைக் கழுவிட, நம்மை இதமாய்க் குளிர்வித்திட, நம்மை மகிழ்வில் நிறைத்திட வேண்டுவோம்.
 
‘நீர் நிலைக்கு நம்மை ஆயன் அழைத்துச் செல்வார்’ என்பதைச் சிந்திக்கும் போது, கருவில் தோன்றியது முதல் கல்லறைக்குள் உறங்கும் வரை தண்ணீர் நம்மை உருவாக்கி, உயிர் கொடுத்து வளர்த்து வருவதை எண்ணிப் பார்ப்போம். நம் உள் உலகில், வெளி உலகில் நம்மைப் பேணி வளர்க்கும் நீருக்காக, அந்த நீரை நம் வாழ்வில் உயிர் தரும் ஊற்றாக உருவாக்கிய இறைவனுக்கு நன்றி கூறுவோம்.
 தண்ணீர் எவ்வாறு உலகின் எல்லா மதங்களிலும் முக்கியதொரு அடையாளமாக உள்ளது, விவிலியத்தில் தண்ணீர் குறித்த சிந்தனைகள் யாவை, நீருடன் தொடர்பான சமுதாய சிந்தனைகள் என்னென்ன என்பவைகளை அடுத்து வரும் விவிலியத் தேடல்களில் சிந்திப்போம்.







All the contents on this site are copyrighted ©.