2010-09-21 15:40:46

மனித மாண்பு, இறைப்பராமரிப்பின் பங்கு ஆகியவை அமைதிக்கான முயற்சிகளுக்கு அடித்தளம்- திருப்பீடத் தூதர்


செப்.21,2010. மனிதனின் இயல்பான மாண்பை மதிப்பதும் இறைப்பராமரிப்பின் வழிநடத்தலும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் நீதி மற்றும் அமைதிக்கான முயற்சிகளுக்கு அடித்தளமாக அமைகின்றன என்று ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் புதிய தூதர் பேராயர் பிரான்சிஸ் சுலிகாட் கூறினார்.

ஐ.நா.பொது அவையின் 65வது அமர்வு தொடங்கப்படுவதற்கு முன்னர் இடம் பெற்ற செப வழிபாட்டில் இவ்வாறு கூறினார் பேராயர் சுலிகாட். நியுயார்க் உயர்மறைமாவட்டம் ஆண்டுதோறும் நடத்தும் இச்செப வழிபாட்டில் குருக்கள், தூதரக அதிகாரிகள், ஐ.நா.பிரதிநிதிகள், அலுவலகர்கள் என சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.

அதேசமயம், நியுயார்க் ஐ.நா.தலைமையகத்துக்கு இம்மாதம் 10ம் தேதி சென்ற புதிய திருப்பீடத்தூதர் பேராயர் பிரான்சிஸ் சுலிகாட் அதேநாளில் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூனிடம் நம்பிக்கைச் சான்றிதழையும் சமர்ப்பித்தார். திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் பெர்த்தோனே அனுப்பிய செய்தியையும் இந்நிகழ்வில் பேராயர் வாசித்தார்.

பசி, கல்வி, சமத்துவமின்மை, தாய்சேய் நலம் போன்ற விவகாரங்கள் குறித்த பிரச்சனைகளைக் களைவதற்கு இரண்டாயிரமாம் ஆண்டில் முன்வைக்கப்பட்டு ஐ.நா.வின் 189 உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட எட்டு இலக்குகள் ஐ.நா.வின் இந்த 65வது அமர்வில் விவாதிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.