2010-09-20 15:34:41

பாகிஸ்தானில் மேலும் ஒரு கிறிஸ்தவக் கோவில் தாக்கப்பட்டுள்ளது.


செப். 20, 2010. அமெரிக்க ஐக்கிய நாட்டில் இஸ்லாமிய புனித நூலான குரானை எரிக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் எழுந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து தற்போது பாகிஸ்தானில் மீண்டும் ஒரு கிறிஸ்தவக் கோவில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

கராச்சியின் ஷா லட்டிஃப் நகரில் 120 கிறிஸ்தவக் குடும்பங்கள் வாழும் பகுதியில் உள்ள பெந்தகோஸ்தே கோவில் ஒன்று சில தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 9 விவிலியப்பிரதிகள், மூன்று பாடல் புத்தகங்கள் மற்றும் மூன்று மரச்சிலுவைகள் எரிந்து சாம்பலாயுள்ளன.

கோவில் வாசலை உடைத்து உட்புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்த மதம் தொடர்புடைய அனைத்துப் பொருட்களையும் உடைத்துச் சேதப்படுத்தியதுடன் எரித்தும் சென்றுள்ளனர்.

ஏற்கனவே இம்மாதம் 12ந்தேதி பாகிஸ்தானின் மர்டன்(Mardan) எனுமிடத்தில் லூத்தரன் கோவில் ஒன்று தாக்கப்பட்டுள்ளது. கடந்த சனியன்று பெந்தகோஸ்தே கோவில் மீது நடத்தப்பட்டத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கிறிஸ்தவ சபை ஊர்வலம் ஒன்றையும் இஞ்ஞாயிறன்று நடத்தியது. கிறிஸ்தவக் கோவில்கள் தொடர்ந்துத் தாக்கப்பட்டு வருகின்ற போதிலும் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மேலும் கோவில்கள் தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்ற கவலையை வெளியிட்டுள்ளார் மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகளுக்கான ஃபைசலாபாத் மறைமாவட்ட அவை இயக்குனர் குரு அஃப்தாப் ஜேம்ஸ் பால்.








All the contents on this site are copyrighted ©.