2010-09-19 15:37:59

திருத்தந்தை – உண்மையை நேசிப்பவர்கள் கேலிக்கூத்துக்களை எதிர்நோக்க வேண்டும்


செப்.19,2010. இந்த நேரம் நம் எல்லாருக்கும் மகிழ்ச்சியின், அளப்பரிய ஆன்மீக மகிழ்ச்சியின் மாலைப் பொழுதாக அமைந்திருக்கிறது. உலகின் பல பகுதிகளில் பலருக்கு ஏற்படுத்தியிருப்பது போலவே, நியுமன் எனது சொந்த வாழ்க்கையிலும் எண்ணத்திலும் மிக முக்கியமானத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இவரது வாழ்வு நம் வாழ்வைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்கு அழைப்பு விடுக்கிறது. திருத்தூதர்களின் திருச்சபையோடு, தூயவர்களின் திருச்சபையோடு, நியுமன் தமது முழு வாழ்வையும் அர்ப்பணித்தத் திருச்சபையோடு எல்லாக் காலத்திலும் எல்லா இடத்திலும் ஐக்கியத்தில் வளரவும் அழைப்பு விடுக்கிறது. இவர் இந்த நம் காலத்தில் அசாதாரணத்தன்மை கொண்ட மனிதராக, திருச்சபையின் மறைவல்லுநராக இருக்கிறார். RealAudioMP3

நியுமன் தனது வாழ்க்கையின் இறுதியில் தனது வாழ்வின் பணி குறித்து விளக்கிய போது, மதம், முழுவதும் தனிப்பட்டவரைச் சார்ந்தது மற்றும் அகத்தைச் சார்ந்தது என்று அக்காலத்தில் வளர்ந்து வந்த எண்ணப் போக்கிற்கு எதிராகத் தான் போராட வேண்டியிருந்தது என்று குறிப்பிடுகிறார். நியுமனின் வாழ்விலிருந்து உண்மையை அடிப்படையாகக் கொண்ட மூன்று பாடங்களைக் கற்றுக் கொள்கிறோம். அறிவு மற்றும் அறநெறிச்சார்புக் கோட்பாடு நம் சமுதாயத்தின் அடித்தளத்தையே உறிஞ்சுவதாக அச்சுறுத்தும் வேளையில் கடவுளின் சாயலாகவும் பாவனையாகவும் படைக்கப்பட்ட நாம், மனிதனின் ஆழமான ஏக்கங்களின் நிறைவும் இறுதி விடுதலையும் அந்தக் கடவுளில் மட்டுமே காண முடியும் என்ற உண்மையைக் காண வேண்டும். வழியும் உண்மையும் வாழ்வுமான கிறிஸ்துவை நாம் அறிய வேண்டும். நம்மை விடுதலையாக்கும் உண்மையை நமக்குள்ளே மட்டும் வைத்திருக்க முடியாது. நியுமனின் வாழ்க்கை, உண்மைக்கானத் தாகமும் நேர்மையான அறிவும் உண்மையான மனமாற்றமும் விலை உயர்ந்தவை என்று போதிக்கின்றது.

இவ்வாறு மறையுரையாற்றிக் கொண்டு வந்த திருத்தந்தை, 12ம் நூற்றாண்டின் தொடக்கமுதல் 18ம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை கத்தோலிக்கர் தூக்கிலிடப்பட்ட அந்தப் பகுதியைக் குறிப்பிட்டுப் பேசினார். ஆண்டவர்முன் எல்லாவற்றையும் ஒப்படைத்த பலர் பேசிய உள்ளத்தைத் தூண்டும் சொற்களைவிட இறுதிவரை விசுவாசத்தில் உறுதியாய் இருந்தவர்களின் சாட்சியங்கள் மிகவும் வல்லமை வாய்ந்தவை. இக்காலத்தில் நற்செய்திக்கு விசுவாசமாக இருப்பதற்காகக் கிடைக்கும் வெகுமதி தூக்கிலிடப்படுவதோ, இழுத்துச் செல்லப்பட்டு துண்டு போடப்படுவதோ இல்லை. மாறாக கேலி செய்யப்படுவதாக அமைகின்றது. எனவே நியுமனின் வாழ்வு என்ன சொல்கிறதென்றால், கிறிஸ்துவின் உண்மையை ஏற்று நம் வாழ்வை அவருக்கு அர்ப்பணித்து விட்டால் நாம் விசுவசிப்பதற்கும் வாழும் முறைக்கும் இடையே பிரிவினையே கிடையாது. வழக்கமான போதனையால் மட்டுமல்ல, நமது ஒருங்கிணைந்த, விசுவாசமான மற்றும் புனிதமானச் சான்று வாழ்க்கை மூலமும் உண்மையைப் பறைசாற்ற முடியும் என்பதாகும்.

ஒவ்வொருவருக்கும் ஒரு பணி உள்ளது. உலகை மாற்றக்கூடிய, வாழ்வுக் கலாச்சாரத்துக்காக, மனித மாண்பை மதித்து அன்பு செய்யக்கூடிய பணி ஒவ்வொருவருக்கும் உள்ளது எனச் சொல்லி இளையோருக்கெனச் சில சிறப்பு வார்த்தைகளைக் கூறினார்.

என் அன்பு இளைய நண்பர்களே, நியுமனிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். உங்களது அழைப்பில் கடவுளின் திட்டத்தைக் கண்டுணருங்கள். கிறிஸ்துவுக்குக் குடும்பங்கள் தேவைப்படுகின்றன. கடவுளுக்கு வாழ்வை அர்ப்பணிப்பதற்கு அஞ்ச வேண்டாம். அடுத்த ஆண்டு மத்ரித்தில் உலக இளையோர் தினத்தை என்னோடு சேர்ந்து சிறப்பிக்க அழைப்பு விடுக்கிறேன்.

இவ்வாறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இலண்டன் ஹைட் பூங்காவில் திருவிழிப்புத் திருவழிபாட்டில் மறையுரையாற்றினார்.








All the contents on this site are copyrighted ©.