2010-09-19 15:37:50

திருத்தந்தை : சமுதாயம் முதியோருக்கு நன்றிக்கடன்பட்டுள்ளது


செப்.19,2010. இன்றைய உலகில் மருத்துவத்திலும் மற்ற துறைகளிலும் காணப்படும் முன்னேற்றம், மக்களின் ஆயுட்காலத்தை நீட்டித்து வருகின்றது. எனினும், எண்ணிக்கையில் அதிகரித்து வரும் வயதானவர்களின் இருப்பு சமுதாயத்துக்கு ஆசீர்வாதமாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியது முக்கியமானதாகும். ஒவ்வொரு தலைமுறையும் தனக்கு முந்தைய தலைமுறையின் அனுபவம் மற்றும் ஞானத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். உண்மையில் முதியோரைப் பராமரித்து வருவது ஏதோ தாராளமனப்பான்மையின் செயலாகக் கருதப்படாமல் அதனை ஒரு நன்றிக்கடனாக நினைத்துச் செய்ய வேண்டும். திருச்சபை தனது பங்கிற்கு எப்பொழுதும் முதியோர் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளது. திருச்சபை, பிரிட்டனிலும் உலகெங்கிலுமுள்ள தனது பிறரன்பு நிறுவனங்கள் வழியாக, வயது, சூழல் என்ற வேறுபாடின்றி வாழ்வை மதிக்க வேண்டுமென்ற நமது ஆண்டவரின் கட்டளையை நிறைவேற்றுவதற்கு முயற்சித்து வருகிறது.

RealAudioMP3 மனித வாழ்வு தாயின் வயிற்றில் கருவான நேரம் முதல் அது இயற்கையான மரணம் அடையும்வரை அது ஒரு தனிப்பட்ட கொடையாகும். அதனைக் கடவுள் மட்டுமே வழங்குபவர் மற்றும் எடுப்பவர். ஒருவர் வயதான காலத்தில் நல்ல உடல் நலத்தை அனுபவிக்கலாம். ஆயினும், நாம் உடல்நலமில்லாம்ல துன்பப்படுவது கடவுளின் திட்டமானால் அவ்வேளைகளில் கிறிஸ்தவர்கள் அவ்வேதனைகளைக் கிறிஸ்துவின் துன்பங்களில் பகிர்ந்து கொள்வதற்குப் பயப்படக் கூடாது. எனக்கு முன் பணியாற்றிய மறைந்த பாப்பிறை இரண்டாம் ஜான் பால் தனது வாழ்வின் கடைசி காலங்களில் வெளிப்படையாகவே துன்பப்பட்டார். அவர் தனது கஷ்டங்களை நம் மீட்பரின் துன்பங்களோடு ஒன்றிணைத்து வாழ்ந்தார் என்பது நம் எல்லாருக்கும் தெளிவாகத் தெரியும். அவர் தனது இறுதி நாட்களில் எதிர் கொண்ட உடல் வேதனைகளைப் புன்முறுவலோடும் உறுதியோடும் தாங்கிக் கொண்டது வாழ்வின் முதுமையை எட்டி வரும் எல்லாருக்கும் குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டு.

இந்த மையத்திற்கு நான் வந்திருப்பது ஒரு தந்தையாக மட்டுமல்ல, முதுமையின் இன்பங்களையும் போராட்டங்களையும் நன்றாக அறிந்த ஒரு சகோதரராகவும் வந்துள்ளேன். நீண்டகால நமது வாழ்வு, கடவுள் நமக்கு அளித்துள்ள மாபெரும் வாழ்வெனும் கொடையின் அழகை, நம் மனிதப் பலவீனங்களுடன் சேர்த்து போற்றுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. நம்மில் நீண்ட காலம் வாழ்கின்றவர்களுக்குத், தம் வாழ்வை மனித சமுதாயத்தோடு பகிர்ந்து கொள்வதற்காகத் தம்மையே தாழ்த்திய கிறிஸ்துவின் பேருண்மையை ஆழமாக உணர்வதற்கான வியத்தகு வாய்ப்பு அருளப்பட்டுள்ளது.

புனிதர்கள் மரியும் வளனும் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும் அமைதியையும் அருள்வார்களாக.

உங்கள் எல்லாரையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக.

இவ்வாறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட், செப்டம்பர் 18, இச்சனிக்கிழமை மாலை உள்ளூர் நேரம் ஐந்து மணியளவில் இலண்டன் புனித பீட்டர் முதியோர் இல்லத்தில் உரையாற்றினார்.







All the contents on this site are copyrighted ©.