2010-09-18 16:26:50

வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத் திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை.


செப். 18, 2010. இக்கோவிலில் தொங்கும் மிகப்பெரியச் சிலுவையை காணும் நாம் சிலுவையின் தியாகத்தை நோக்குவதிலிருந்து துவங்குவோம். கிறிஸ்துவின் இரத்தம் சிந்தலே திருச்சபை வாழ்வின் ஆதாரம். 'என் நினைவாகச்செய்யுங்கள்' என்ற கிறிஸ்துவின் கட்டளையைத் தாங்கி திருப்பலி நிறைவேற்றலை காலம் காலமாக செய்து வருகின்றது திருச்சபை. இங்கு தொங்கும் இம்மாபெரும் சிலுவையானது நம் வேதனைகள், ஏக்கங்கள், தேவைகள், நம்பிக்கைகள் போன்றவைகளை இயேசுவின் பலியின்/தியாகத்தின் முடிவற்ற பலன்களோடு இணைப்பதை நினைவூட்டுவதாக உள்ளது. இயேசுவின் மதிப்பு மிகுந்த இரத்த மறையுண்மையானது ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மறைசாட்சியங்களில் உயிரோட்டமாய் இடம்பெற்று திருச்சபைக்குப் புதிய வாழ்வை வழங்கி வந்துள்ளது. கிறிஸ்தவ விசுவாசத்திற்காக இன்றைய உலகில் துன்புறும் நம் சகோதர சகோதரிகளின் வழியாகவும் அது வெளிப்படுத்தப்படுகின்றது.

இவ்வேளையில் நான், பாலியல் முறையில் சிறார்கள் தவறாக நடத்தப்பட்டது, குறிப்பாக திருச்சபைக்குள் அதன் குருக்களால் தவறாக நடத்தப்பட்டதால் விளைந்த எண்ணற்ற வேதனைகள் குறித்து நினைவுகூற விரும்புகிறேன். இத்தகைய குற்றங்களால் துன்பங்களை அனுபவித்த அப்பாவி மக்களைக் குறித்த என் ஆழ்ந்த கவலையை வெளியிடுவதுடன், கிறிஸ்துவின் அருளின் வல்லமையும் ஒப்புரவின் தியாகமும், ஆழமான குணப்படுத்தலையும் அமைதியையும் அவர்கள் வாழ்வில் வழங்க வேண்டும் என்ற நம்பிக்கையையும் தெரிவிக்கிறேன். இப்பாவச்செயல்களால் நாமனைவரும் அனுபவித்த தலைகுனிவு மற்றும் நாணக்கேடு பற்றி ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, இதனால் பாதிக்கப்பட்டோர் குணப்படவும், திருச்சபை சுத்திகரிக்கப்படவும், கல்வி மற்றும் இளையோர் மீதான அக்கறைக்கான அர்ப்பணம் புதுப்பிக்கப்படவும் இறைவனை நோக்கி ஜெபிக்குமாறு உங்களனைவரையும் வேண்டுகிறேன். இப்பிரச்னையை பொறுப்புணர்வுடன் அணுகுவதற்கான முயற்சிகளுக்கு நன்றி கூறுவதோடு, பாதிக்கப்பட்டோருக்கான அக்கறையை வெளிப்படுத்தி, உங்கள் குருக்களோடு ஒருமைப்பாட்டைக் கொண்டிருக்குமாறு அழைப்பு விடுக்கிறேன். இவ்வுலகில் புளிக்காரமாய் செயல்பட வேண்டிய பொதுநிலையினரின் கடமை குறித்து இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் வலியுறுத்தியதை இங்கு சுட்டிக்காட்ட விழைகிறேன். இந்நாட்டின் இளைஞர்கள் இறைவனின் அழைப்புக்கு தாராள மனதுடன் பதிலளிப்பார்களாக.








All the contents on this site are copyrighted ©.