2010-09-17 16:29:24

பல்வேறு மதங்களின் பிரதிநிதிகளுக்கு திருத்தந்தை வழங்கிய உரை


பல்வேறு மதங்களின் பிரதிநிதிகளாக, அரசியல், வணிகம், தொழில்துறை என்ற பல துறைகளிலிருந்து வந்திருக்கும் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன் என்று தன் உரையைத் துவக்கினார் திருத்தந்தை.
இவ்வெள்ளியன்று Yom Kippur கொண்டாட்டங்களை மேற்கொண்டுள்ள யூத சமுதாயத்திற்குத் தன் சிறப்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
நாம் எந்த மதத்தைச் சார்ந்திருந்தாலும், பொதுவாக மத உணர்வுகளை, மத கோட்பாடுகளை மதிக்கும் வகையில் வாழ்வதே இன்றைய உலகிற்கு நாம் அளிக்கும் சிறந்த சாட்சிய வாழ்வு. மனிதன் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை என்பதை வலியுறுத்தும் வகையில், உலகின் பல்வேறு துறைகளிலும் வெறும் பொருள் ஆதாயங்களுக்காக மட்டும் வாழாமல், மேலான பல கோட்பாடுகளுடன் நீங்கள் வாழ்வது போற்றுதற்குரியது.
இறைமையை, ஆன்மீகத்தைத் தேடிச் செல்வது இந்த உலகத் தொடர்பான ஆராய்ச்சிகளைக் குறைத்துக் காணும் போக்கு அல்ல. மாறாக, இவ்வுலகைச் சார்ந்த அனைத்துத் தேடல்களையும் ஒரு தகுதியானச் சூழலில் வைத்துப் பார்க்க இது உதவும்.
இந்த உலகைத் தாண்டிய உண்மைகளுடன் நமது அறிவியல், பொருளாதாரம் என்ற பல முயற்சிகளும் இணைக்கப்படாத போதுதான், நமது இயற்கையைத் தேவைக்கும் அதிகமாகப் பயன்படுத்துவது, அழிப்பது போன்ற தீய விளைவுகள் எழுகின்றன என்ற எச்சரிக்கையை எடுத்துரைத்த திருத்தந்தை, நம் அனைவருக்கும் இந்த உலகைப் பேணிக்காக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்று வலியுறுத்தினார். RealAudioMP3
தன் உரையின் இறுதியில் மதங்களுக்கிடையேயான உரையாடல்களின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார். இரண்டாம் வத்திக்கான் திருஅவையில் ஆரம்பமான இந்த முயற்சிகள் மேலும் தொடர வேண்டுமென்ற தன் விருப்பத்தையும் எடுத்துரைத்து, தன் உரையை நிறைவு செய்தார்.







All the contents on this site are copyrighted ©.