2010-09-17 16:28:10

நாம் வாழும் உலகின் கலாச்சாரத்தை நற்செய்தி மதிப்பீடுகளின் படி வழி நடத்த நாம் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம் திருத்தந்தையின் மறையுரை


RealAudioMP3 இறையரசு நம்மை நெருங்கியுள்ளது என்ற நற்செய்தி வார்த்தைகளுடன் தன் மறையுரையை ஆரம்பித்தத் திருத்தந்தை, திருப்பலியில் தன்னுடன் கலந்து கொள்ளும் கர்தினால் ஓ’ப்ரையன், பேராயர் கோன்டி மற்றும் அனைத்து ஆயர்கள் குருக்கள் மக்கள் அனைவரையும் வாழ்த்தினார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன், ஸ்காட்லாந்து வரலாற்றில் அதுவரை காணாத அளவு மக்கள் கூடி வந்து இதே பூங்காவில் எனக்கு முந்தைய திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலை வரவேற்றதை உணர்வுப் பூர்வமாய் இப்போது நினைத்துப் பார்க்கிறேன் என்று தன் மறையுரையின் துவக்கத்தில் திருத்தந்தை குறிப்பிட்டார்.

ஸ்காட்லாந்து திருச்சபையின் பல வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூர்ந்த திருத்தந்தை, கிறிஸ்தவ சபைகளுக்கு இடையேயான புரிதலும், கூட்டுறவும் வளர்ந்து வருவது இன்றைய மாறிவரும் உலகில் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் வளர்க்கும் ஒரு போக்கு என்று கூறினார். ஸ்காட்லாந்தில் திருத்தந்தையரால் நிறுவப்பட்ட மூன்று பல்கலை கழகங்களையும் குறிப்பிட்டுப் பேசிய பாப்பிறை, இன்று ஸ்காட்லாந்தில் உள்ள கத்தோலிக்கப் பள்ளிகள் வலுவான ஆன்மீக அடித்தளத்துடன் இளையோரை இன்றைய சவால்கள் நிறைந்த உலகிற்கு தயாரித்து வருவது போற்றுதற்குரியது என்றும் கூறினார்.
RealAudioMP3
எந்த ஒரு கொள்கையிலும் வேரூன்றாமல் வாழ்வதை ஒரு வாழ்வியல் தத்துவமாக தீவிரமாய் பரப்பி வரும் இவ்வுலக போக்கு நம்மைக் கவலை அடையச் செய்கிறது. இந்தப் போக்கிற்கு ஒரு மாற்றாக, நாம் வாழும் உலகின் கலாச்சாரத்தை நற்செய்தி மதிப்பீடுகளின் படி வழி நடத்த நாம் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம். இந்த நற்செய்திப் பணியை நமது சகோதர, சகோதரிகளுக்கு தயக்கமோ, அச்சமோ இன்றி நாம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறிய பாப்பிறை 16ம் பெனடிக்ட், தயக்கமின்றி, அச்சமின்றி கிறிஸ்துவை ஏனைய பிரித்தானியர்களுக்கு எடுத்துரைத்த புனித நினியனை எடுத்துக்காட்டாகக் கூறினார்.
தன் மறையுரையின் இறுதிப் பகுதியில் ஆயர்கள், குருக்கள், துறவியர், மக்கள், சிறப்பாக, இளையோருக்கு தன் அறிவுரைகளையும், அழைப்பையும் விடுத்தார்.
குருக்களையும், தியாக்கோன்களையும் அருள்பணியில் நன்முறையில் வழி நடத்தி, உருவாக்குவதில் ஆயர்கள் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட திருத்தந்தை, குருக்கள், மற்றும் துறவறத்தார் குன்றின் மேலிட்ட விளக்குகளாய்த் திகழ வேண்டுமென்ற அழைப்பை விடுத்தார்.
RealAudioMP3
இறுதியாக, திருத்தந்தை அங்கு கூடியிருந்த கத்தோலிக்க இளையோருக்குத் தன் சிறப்பான அறிவுரைகளை வழங்கினார். மகிழ்ச்சி காணும் வழிகள் என்று இந்த உலகம் ஒவ்வொரு நாளும் உங்கள் முன் வைக்கும் பணம், போதைப்பொருட்கள், மது, பாலியல் செயல்பாடுகள் என்ற அனைத்து சோதனைகளையும் நீங்கள் வென்று, கிறிஸ்துவில் உங்கள் மகிழ்ச்சியைக் காண உங்களை அழைக்கிறேன் என்று கேட்டுக் கொண்டார்.
கிறிஸ்துவின் பணிக்கு பலரும் முன் வர வேண்டும் என்ற நோக்கத்தில் தேவ அழைத்தலுக்கு சிறப்பாக மக்கள் செபிக்க வேண்டுமென்ற தன் அழைப்பினை இறுதியாக வழங்கி, திருத்தந்தை தன் மறையுரையை நிறைவு செய்தார்.







All the contents on this site are copyrighted ©.