2010-09-17 16:36:16

திருத்தந்தையின் பிரிட்டனுக்கானத் திருப்பயண விளக்கம் – கிளாஸ்கோ மற்றும் இலண்டனில் திருத்தந்தை


செப்.17,2010. “கதிரவனின் கரங்கள் படும் இடங்களில் பனி மாயமாய் மறைந்து விடும்”. “ஜெர்மன் திருத்தந்தை உறைந்த இதயங்களை உருகச் செய்துள்ளார்”. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பிரிட்டனுக்கு மேற்கொண்டு வரும் இத்திருப்பயணம் குறித்து இவ்வெள்ளி காலை தினத்தாள்கள் இவ்வாறு உருவகமாகச் சொல்லி பாராட்டியிருந்தன. வேண்டா வெறுப்பாகவும் பாராமுகமாகவும் இருந்த ஒரு நிலையை இவர் மாற்றிக் காட்டியுள்ளார் என்றும் ஊடகங்கள் புகழ்ந்து வருகின்றன. ஐந்து மொழிகளில் 1800 செய்தி தலைப்புகள் திருத்தந்தையின் இந்தப் பயணம் பற்றி இருந்தன. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இவ்வியாழன் காலை உரோமையிலிருந்து எடின்பர்க் சென்ற விமானப் பயணத்தின் போதுகூட நிருபர்கள் அவரிடம் இப்பயணத்தையொட்டிய எதிர்ப்புகள் அவருக்கு பயத்தை ஏற்படுத்தியதா? என்று கேட்டனர். அப்போது அவர், இவை குறித்துத் தான் பயப்படவில்லை. கத்தோலிக்கத்துக்கு எதிரான மாபெரும் எதிர்ப்புத் தன்மையும் மாபெரும் சகிப்புத்தன்மையும் நிறைந்த வரலாற்றைக் கொண்ட நாடு பிரிட்டன். பிரான்ஸ், செக் குடியரசு போன்ற நாடுகளுக்கானத் திருப்பயணத்தின் போதும் இவ்வாறு எதிர்ப்புக்களை எதிர் கொண்டேன். ஆனால் அப்பயணங்களின் போது இனிதான வரவேற்பைப் பெற்றேன் என்றார். இந்த முதல் நாள் திருப்பயணத்தில் ஸ்காட்லாந்தின் எடின்பர்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைப் பார்த்த போது திருத்தந்தையின் இக்கூற்று உண்மையாகியிருப்பதை உணர முடிகின்றது. இவ்வியாழன் நிகழ்வுகள் குறித்த கருத்தை இலண்டன் வாழ் திருவாளர் பெலிக்ஸ் கர்டோசாவிடம் தொலை பேசியில் கேட்டோம்.

RealAudioMP3 திருத்தந்தை மேற்கொண்டு வரும் இந்த அவரது 17 வது வெளிநாட்டுத் திருப்பயணத்தின் முதல் நாளாகிய இவ்வியாழன் மாலை எடின்பர்க்கிலிருந்து கிளாஸ்கோ சென்றார். ஸ்காட்லாந்தின் பெரிய நகரமான கிளாஸ்கோ எடின்பர்க்கிலிருந்து 86 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்றது. இனிமையான பசுமை என்று பொருள்படும் இந்த கிளாஸ்கோ நகரில் மட்டும் 90 பூங்காக்கங்கள் உள்ளன. எண்ணற்ற அருட்காட்சியகங்களும் கலைக் காட்சியகங்களும் இருக்கும் இந்நகரில் விளையாட்டு நிகழ்வுகளும் இடம் பெறுகின்றன. இந்நகரின் மையப் பகுதிக்கு சுமார் மூன்று மைல் தூரத்திலுள்ள பெல்லாஹவுஸ்டன் பூங்காவில் வியாழன் மாலை உள்ளூர் நேரம் 5.15 மணிக்குத் திருப்பலி நிகழ்த்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இந்தத் திருப்பலியில் 800 பேர் கொண்ட பாடகர் குழு பாடியது. இக்குழுவில் ஸ்காட்லாந்தின் புகழ்மிக்க பாடகர்கள் இருவர் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் Got Talent தொலைகாட்சி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற Susan Boyleம், ‘Pop Idol’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற Michelle McManusம் என்பது குறிப்பிடத்தக்கது. திருத்தந்தையை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் அவரைப் பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆவலில் இதில் கலந்து கொண்டதாக இவர்கள் கூறியதாக ஊடகங்களில் வாசித்தோம்.

திருத்தந்தையின் திருப்பலியில் கலந்து கொள்வதற்கு வியாழன் மதியமே பெல்லாஹவுஸ்டன் பூங்காவிற்கு மக்கள் வரத் தொடங்கினர். இதில் ஏறத்தாழ 75 ஆயிரம் விசுவாசிகள் கலந்து கொண்டனர். இதில் முதலில் பேராயர் மாரியோ கோந்தி பிரிட்டன் திருச்சபையின் சார்பில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். இதில் திருத்தந்தை மறையுரை ஆற்றினார்.

இத்திருப்பலியைத் தொடங்கு முன்னர் திருத்தந்தை திறந்த காரில் அவ்விடத்தில் வந்த போது ஒரு வயது Maria Tyszczak என்ற குழந்தையைத் தூக்கி அவர் உச்சி முகந்து ஆசீர்வதித்தது அக்குழந்தையின் தாயையும் குடும்பத்தினரையும் அதிர்ச்சி ஆனந்தத்தில் ஆழ்த்தியதாக 23 வயது தாயான Marzena Tyszczak கூறியிருக்கிறார். திருத்தந்தையைப் பார்க்க வேண்டுமென்று வந்த பலருக்கு இவ்வாறு எதிர்பாராத அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. நகர மேயர், To Dream of Rome என்ற வரலாற்று நூல் உட்பட மூன்று புத்தகங்களைத் திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தார்.

திருச்சபை ஸ்காட்லாந்து இளையோருக்கு உரியது என்பதை நினைவுபடுத்திய இத்திருப்பலியை முடித்து அங்கிருந்து இலண்டனுக்குப் புறப்பட்டார் திருத்தந்தை. 556 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள இலண்டனை அவர் அடைந்த போது உள்ளூர் நேரம் இரவு 9 மணி 25 நிமிடங்கள். இலண்டன் ஹீத்ரு விமான நிலையத்திலிருந்து திருப்பீடத் தூதரகம் சென்றார் திருத்தந்தை. இத்துடன் பிரிட்டனுக்கான முதல் நாள் திருப்பயண நிகழ்வுகள் நிறைவடைந்தன.

நான்கு நாட்கள் கொண்ட இத்திருப்பயணத்தின் இரண்டாவது நாளான இவ்வெள்ளி நிகழ்வுகள் உள்ளூர் நேரம் காலை 8 மணிக்கு ஆரம்பமாயின. இலண்டன் திருப்பீடத் தூதரகச் சிற்றாலயத்தில் திருப்பலி நிகழ்த்திய பின்னர் Twickenham (St.Mary’s University College) புனித மேரி பல்கலைக்கழகக் கல்லூரிக்குச் சென்றார். 1850ம் ஆண்டில் கத்தோலிக்கத் திருச்சபை மீண்டும் வேரூன்றத் தொடங்கிய காலத்திலிருந்தே கல்வி அதன் முக்கிய பணியாக இருந்து வருகின்றது. அதற்கு இக்கல்லூரி ஒரு சான்றாகும். அக்கல்லூரியிலுள்ள சிற்றாலயத்தில் முதலில் சிறிய வழிபாடு ஒன்று நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டோரை வாழ்த்திப் பேசினார் திருத்தந்தை.

பின்னர் திறந்த காரில் அக்கல்லூரியின் விளையாட்டு மைதானத்திற்குத் திறந்த காரில் சென்றார். அங்கு ஆசிரியர்கள், இன்னும் ஏறத்தாழ நான்காயிரம் மாணவ மாணவியர் பலவண்ணச் சீருடைகளில் கூடியிருந்தனர். மாணவ மாணவியர் சார்பாக இருவர் சான்று சொன்னார்கள். திருத்தந்தையும் உரை வழங்கினார்.

இந்நிகழ்வில் விளையாட்டுத் துறைக்கெனத் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் பெயரில் ஓர் அமைப்பைத் தொடங்கி வைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். அப்போது ஒரு படம், ஒரு மெழுகுதிரி மற்றும் ஒரு மணியை இவ்வமைப்பின் அடையாளமாக ஆசீர்வதித்தார். மாதா படம் ஒன்றையும் பரிசாக அளித்தார்.

இந்த நிகழ்ச்சியை முடித்து St Mary's University College யிலுள்ள மற்றோர் அறையில் யூதம், இசுலாம், இந்து சீக் போன்ற மதங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தார் திருத்தந்தை.

இச்சந்திப்பில் யூதமதம் சார்பில் ராபி Baron Sacksம், இசுலாம் மதத்தின் சார்பில் Khaled Azzamம் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.

திருத்தந்தை இந்தப் பல்சமயக் குழுவுக்கு உரை ஆற்றினார்.

இதன் பின்னர் மாலையில் கான்டர்பரி பேராயர் இல்லம் சென்று ஆங்லிக்கன் பேராயரைச் சந்தித்தல், இலண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் பல துறையினரைச் சந்தித்தல், கிறிஸ்தவ ஒன்றிப்பு திருவழிபாடு ஆகியவை நிகழ்ச்சித் திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

உண்மையான மகிழ்ச்சியைக் கடவுளில் மட்டுமே காண முடியும். நமது ஆழமான நம்பிக்கைகளையும் ஏக்கங்களையும் பணத்தில், சாதனைகளில், உறவுகளில் அல்ல, மாறாகக் கடவுளில் மட்டுமே வைப்பதற்குத் தைரியம் தேவை. இவை போன்ற அழைப்புகள் இந்த இரண்டாம் நாள் திருப்பணத் திட்டங்களில் திருத்தந்தை முன்வைத்துள்ளார். இதில் நாமும் வளருவோம்.







All the contents on this site are copyrighted ©.