2010-09-15 15:20:46

திருத்தந்தையின் புதன் பொது மறை போதகம்


செப்.15,2010. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இவ்வியாழன் காலை பிரிட்டனுக்கான நான்கு நாள் மேய்ப்புப்பணித் திருப்பயணத்தைத் தொடங்குவதற்குத் தயாரித்து வருகிறார். இவ்வேளையில் இப்புதன் காலை காஸ்தெல் கந்தோல்போவிலிருந்து ஹெலிகாப்டரில் வத்திக்கான் வந்து வழக்கமான தமது புதன் பொது மறை போதகத்தை வழங்கினார். திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்தில் அமர்ந்திருந்த ஆறாயிரத்துக்கு மேற்பட்ட திருப்பயணிகளுக்கு அசிசி நகர் புனித கிளாரா பற்றிப் பேசினார். மாபெரும் தியான யோகியும் புனித பிரான்சிசின் நண்பரும் ஏழை கிளாரா சகோதரிகள் சபையை ஆரம்பித்தவருமான அசிசியின் புனித கிளாரா குறித்து இன்றைய மறைக்கல்வியில் பார்ப்போம் என்று புதன் பொது மறை போதகத்தைத் தொடங்கினார் திருத்தந்தை. RealAudioMP3

செல்வக் குடும்பத்தில் பிறந்த கிளாரா இறைவனின் பராமரிப்பில் மிகுந்த நம்பிக்கை கொண்டு கன்னிமை மற்றும் கடுமையான ஏழ்மை வாழ்வைத் தேர்ந்தெடுத்தார். புனித பிரான்சிசின் வழிகாட்டுதலுடன் கிறிஸ்துவுக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அசிசியில் புனித தமியான் ஆலயத்தில் பொதுவான குழுவாழ்வைத் தொடங்கினார். கிளாராவுக்கும் பிரான்சிஸ்க்கும் இடையே நிலவிய ஆன்மீக ரீதியிலான நட்பு, மாபெரும் புனிதர்கள் இத்தகைய நட்புகளில் கிறிஸ்துவை இன்னும் அதிகமதிகமாக அன்பு செய்வதற்கும் நிறைவாழ்வை நோக்கிய பாதையில் வல்லமையைப் புதுப்பிப்பதற்கும் எவ்வளவு சக்திவாய்ந்த தூண்டுதலாக இருந்திருக்கிறது என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது. ஒரு பெண்ணால் முதல்முறையாக எழுதப்பட்ட கிளாராவின் கொள்கை விதிமுறைகள், பிரான்சிஸ் மற்றும் கிளாராவின் எடுத்துக்காட்டுகளைப் பின்செல்லும், வளர்ந்து வரும் பெண்கள் சபைகளில் பிரான்சிஸ்கன் தனிவரத்தை பாதுகாத்து வளர்ப்பதற்கு உதவுகின்றன. திருநற்கருணையால் ஊட்டம் பெற்ற கிளாராவின் ஆன்மீகம் ஒவ்வொரு புண்ணியத்திற்கும் ஊற்றும் நிறைவுமாகவும இருக்கும் கிறிஸ்துவின் அன்பைத் தியானிப்பதை அடிப்படையாக அமைந்துள்ளது. திருச்சபை தனது விண்ணக மணாளன் மீது வைத்திருக்கும் அன்பின் அடையாளமாக புனித கிளாரா அர்ப்பணிக்கப்பட்ட கன்னிமையின் மதிப்பை நமக்குக் காட்டுகிறார். மேலும் துணிவுடைய மற்றும் விடசுவாசம் நிரம்பிய பெண்கள் எல்லாக் காலத்திலும் திருச்சபையின் புதுப்பித்தலுக்காக ஆற்றிய குறிப்பிடத்தக்கப் பங்களிப்பின் அடையாளமாகவும் அவர் உள்ளார். RealAudioMP3 இவ்வாறு தனது புதன் பொது மறை போதகத்தை நிறைவு செய்த திருத்தந்தை, தெற்கு ஆசியாவின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தாந் ஆகிய நாடுகளில் இந்நாட்களில் இடம் பெறும் நிகழ்வுகள் மிகுந்த கவலை தருவனவாக உள்ளன என்றார். இதில் பலியானவர்களுக்காகத் தான் செபிப்பதாகவும் கூறினார். RealAudioMP3
இன்னும், சமய சுதந்திரம் மதிக்கப்பட்டு வெறுப்பையும் வன்முறையையும் வெற்றி கொள்ளும் ஒப்புரவும் அமைதியும் மேலோங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். பின்னர் திருப்பயணிகளை வாழ்த்தித் தமது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.