2010-09-15 15:11:45

திருத்தந்தையின் பிரிட்டனுக்கான முதல் திருப்பயணம் (செப்டம்பர் 16-19)


செப்டம்பர் 15, 2010 பிரிட்டனுக்கானத் தனது முதல் திருப்பயணத்தை இவ்வியாழனன்று தொடங்குகிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
வியாழன் உள்ளூர் நேரம் காலை 8.10 மணிக்கு உரோம் சம்ப்பினோ விமான நிலையத்திலிருந்து புறப்படும் திருத்தந்தை ஸ்காட்லாண்ட் தலைநகர் எடின்பர்க்கை உள்ளூர் நேரம் 10.30 மணிக்குச் சென்றடைவார்.
இத்தாலிக்கு வெளியே திருத்தந்தை மேற்கொள்ளும் இந்த 17வது திருப்பயணத்தில் முதல் நிகழ்ச்சியாக எடின்பர்க் ஹாலிரூட்ஹவுஸ் அரசு மாளிகையில் வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். அங்கு பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்தைச் சந்திப்பார். மாலையில் கிளாஸ்கோ பெல்லாஹவுஸ்டன் பூங்காவில் திருப்பலி நிகழ்த்துவார்.
திருத்தந்தையின் இந்தத் திருப்பயணம் பற்றி விளக்கிய திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெடரிக்கோ லொம்பார்தி, இந்தத் திருப்பயணம் குறித்து சில எதிர்ப்பு சப்தங்கள் அங்குமிங்கும் கேட்டாலும் இத்திருப்பயணம் குறித்த பிரிட்டன் சமுதாயத்தின் எதிர்பார்ப்பும் ஆர்வமும் அதிகரித்து வருகின்றன என்றார்.
பர்மிங்காமில் வருகிற ஞாயிறன்று இறையடியார் கர்தினால் ஜான் ஹென்றி நியுமனை முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தும் திருப்பலி திருத்தந்தையின் இத்திருப்பயணத்தின் மணிமகுடமாக விளங்கும் என்றும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
இவ்வெள்ளியன்று இலண்டன் வரலாற்று சிறப்புமிக்க வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் நிறுவனங்கள் மற்றும் பொதுநிலை சமுதாயத்தின் பிரதிநிதிகளைத் சந்தித்து உரையாற்றுவதும் இப்பயணத்தின் முக்கிய நிகழ்வாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும், இத்திருப்பயணம் குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த பிரிட்டன் பிரதமரின் இப்பயணத்திற்கான பிரதிநிதி Lord Patenம் பேராயர் வின்சென்ட் நிக்கோல்சும், இதன் வரலாற்றுத் தன்மையையும் உலகின் பல நாடுகளுக்கான இதன் முக்கியத்துவத்தையும் விவரித்தனர்.
இப்பயணம், பிரிட்டனுக்கும் திருப்பீடத்துக்கும் இடையேயான உறவை வலுப்படுத்துவதாக இருக்கும் என்று உரைத்த Lord Paten இது உலகில் ஏழ்மை மற்றும் வெப்பநிலை மாற்றத்தைக் குறைக்கவும் உதவும் என்றார்.
நான்கு நாட்கள் கொண்ட இத்திருப்பயணம் செப்டம்பர் 19, வருகிற ஞாயிறன்று நிறைவடையும். ஞாயிறு இரவு 10.30 மணியளவில் திருத்தந்தை உரோம் சம்ப்பினோ விமான நிலையம் வந்தடைவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1982ல் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் பிரிட்டனுக்குத் திருப்பயணம் மேற்கொண்டார். அதற்குப் பின்னர் தற்போது திருத்தந்தை 16ம் பெனடிக்டின் திருப்பயணம் இடம் பெறவுள்ளது.







All the contents on this site are copyrighted ©.