2010-09-15 15:10:38

உலகில் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை சென்ற ஆண்டை விட குறைந்துள்ளது - ஐ.நா. நிறுவனங்கள் அறிவிப்பு


செப்டம்பர் 15, 2010 உலகில் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை சென்ற ஆண்டை விட குறைந்துள்ளது, ஆயினும் இந்த எண்ணிக்கையும் ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல என்று ஐ.நா. வின் இரு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமான (FAO)வும், ஐ.நா.உலக உணவு செயல்பாடுகள் நிறுவனமான (WFP)ம் இணைந்து இச்செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளன.
பசியால் வாடுவோரின் எண்ணிக்கை 2009ம் ஆண்டு 102 கோடிக்கும் அதிகமாக இருந்ததாகவும், அவ்வெண்ணிக்கையில் பத்து கோடி பேர் அளவு குறைந்திருப்பதாகவும் இவ்வறிக்கை கூறுகிறது.
இவ்வெண்ணிக்கை குறைந்திருந்தாலும், இன்னும் ஆறு நொடிக்கு ஒரு குழந்தை இறப்பதும், இன்னும் பல கோடி குழந்தைகள் உணவு பற்றாக் குறையால் வாடுவதும் உலகின் பெரும் துயரமான, அதிர்ச்சி தரும் உண்மை என்று FAO இயன்க்குனர் Jacques Diouf கூறினார்.
மில்லேன்னிய ஆண்டை ஓட்டி நாம் மேற்கொண்ட முயற்சிகளால் உலகில் பசித்திருப்போரின் எண்ணிக்கை குறைந்துள்ளதென்றாலும், இன்னும் இந்த முயற்சியில் உலக நாடுகள் அதிக முனைப்புடன் செயல்பட வேண்டுமென்று உலக உணவு செயல்பாடுகளின் இயக்குனர் Josette Sheeran கூறினார்.நியூயார்க்கில் உள்ள ஐ.நா.வின் தலைமை அலுவலகத்தில் வருகிற வாரம் உலகத் தலைவர்கள் ஒன்று கூடி மில்லேன்னியத் திட்டங்கள் குறித்த பரிசீலனை கூட்டத்தில் கலந்து கொள்வர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.