2010-09-13 16:26:38

கிறிஸ்தவ ஒன்றிப்பின் முக்கியத்துவம் குறித்து வத்திக்கானிற்கான ஜெர்மன் தூதுவரிடம் எடுத்துரைத்தார் பாப்பிறை


செப்.13, 2010. ஜெர்மன் நாட்டில் நாத்ஸி கொடுமைகள் இடம்பெற்ற காலத்தில் சித்ரவதைகளை அனுபவித்து, தற்போது விரைவில் முத்திப்பெற்றவர்களாக அறிவிக்கப்பட உள்ள கத்தோலிக்கக் குருக்கள், இத்துன்பங்களை அனுபவித்த ஏனையக் கிறிஸ்தவ சபைக்குருக்களுடன் நட்புணர்வுடன் பழகியது, ஜெபம் மற்றும் துன்பத்தில் கிறிஸ்தவ ஒன்றிப்பின் சாட்சியமாக உள்ளது என்றார் திருத்தந்தை.

வத்திக்கானிற்கான ஜெர்மனியின் தூதுவர் Walter Jurgen Schmid இடமிருந்து நம்பிக்கைச் சான்றிதழ்களைப் பெற்ற வைபவத்தில் உரையாற்றிய பாப்பிறை, இத்தகையச் சாட்சியங்களை நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்தவ ஐக்கிய முயற்சிகளில் ஓர் ஒளிர்விடும் மைல்கல்லாக நோக்கவேண்டும் என அழைப்பு விடுத்தார். நாத்ஸி கொடுமைகள் இடம்பெற்ற காலத்தில் மதங்களைப் பின்பற்றுவதற்கான உரிமை, கருத்துச் சுதந்திரம், அமைதி மற்றும் மாண்பிற்கானச் சுதந்திரம் பொன்றவைகளுக்கானப் போராட்டத்தில் கிறிஸ்தவ விசுவாச உறுதிப்பாடு பெருமளவில் உதவியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இன்று நாம் ஒரு சுதந்திர ஜனநாயக சமூகத்தில் வாழும் பேறுபெற்றிருந்தாலும், மத அர்ப்பணம் என்பது பெருமளவில் குறைந்து காணப்படுகிறது என்ற கவலையையும் வெளியிட்டார்.

சமூகத்தில் திருமணம் மற்றும் குடும்பங்களின் முக்கிய இடம் குறித்தும் எடுத்தியம்பிய பாப்பிறை, ஒவ்வொருவரும் உண்மைக்கு விசுவாசமுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.