2010-09-11 16:29:55

செப்டம்பர் 12, நாளும் ஒரு நல்லெண்ணம்


1940ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி, (Marcel Ravidat, Jacques Marsal, Georges Agnel, and Simon Coencas என்ற) நான்கு இளையோர் பிரான்சில் லாஸ்கோ (Lascaux) என்ற இடத்தில் குகை ஓவியங்களைக் கண்டுபிடித்தனர். இந்தக் குகை ஓவியங்கள் 17,000 ஆண்டுகளுக்கும் பழைமையானவை. மனித வரலாற்றுச் சங்கிலியின் ஒரு முக்கிய இணைப்பு இது.
இந்தப் பழைமைக் கருவூலத்தைக் காக்க கடந்த 70 ஆண்டுகளாகப் பாடுபட்டு வருகிறோம், ஒரு போராட்டமே நடத்தி வருகிறோம்... குகைகளில் பொருத்தப்பட்ட ஒளி விளக்குகள், குளிர் சாதன வசதிகள், பார்வையாளர்களின் அளவு கடந்த கூட்டம், அவர்கள் ‘காமிரா’க்களில் இருந்து வரும் ‘ப்ளாஷ்’ விளக்குகள் என்று பல காரணங்களால் இந்தக் குகை ஓவியங்கள் வெகுவாகப் பாழாகி உள்ளன. இந்த அரிய கருவூலத்தைக் காக்கும் நோக்கத்தில், 2008ம் ஆண்டு ஜனவரியிலிருந்து இந்தக் குகைக்குள் ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே அவ்வப்போது சென்று வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பழைமைக்குள் புதுமைகளைப் புகுத்தி, மனித குலத்தின் கலாச்சாரப் பதிவுகளை, நினைவுச் சின்னங்களை வியாபாரமாக்கும் போது, இந்த நிலை ஏற்படும். உலகில் இன்று பல்வேறு பழைமைக் கலாச்சார நினைவுச் சின்னங்கள் அனைத்துமே வியாபாரத் தலங்களாக மாறிய பிறகு, அனைத்திற்கும் இந்த நிலைதானே. இம்மாத இறுதியில் தஞ்சைப் பெரிய கோவிலின் ஆயிரம் ஆண்டு நிறைவையும் பெருமையோடு, கொஞ்சம் கவனத்தோடு கொண்டாடுவோம்.







All the contents on this site are copyrighted ©.