2010-09-11 16:21:40

ஓர் ஆயரின் வாழ்வு தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஆன்மாக்களின் மீட்புக்காகக் கடவுளிடம் தொடர்ந்து அர்ப்பணிப்பதாக இருக்க வேண்டும் - திருத்தந்தை


செப்.11,2010. ஓர் ஆயரின் வாழ்வு தனது திருச்சபையின் மீட்புக்காகக், குறிப்பாக தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஆன்மாக்களின் மீட்புக்காகக் கடவுளிடம் தொடர்ந்து அர்ப்பணிப்பதாக இருக்க வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

இந்த மேய்ப்புப்பணிக் கடமையானது ஆயரின் பிறர்க்கென வாழும் உண்மையான மாண்பையும் கட்டி எழுப்புவதாக இருக்கின்றது என்றுரைத்த திருத்தந்தை, இப்பண்பானது, ஆயர் தனது வாழ்வை எல்லாருக்காகவும் கையளிக்கும் ஊழியனாக இருப்பதிலிருந்து வெளி வருவதாகும் என்று விளக்கினார்.

அகிலத் திருச்சபையில் அண்மையில் ஆயர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களில் 110 ஆயர்களை காஸ்தெல் கந்தோல்போவிலுள்ள அப்போஸ்தலிக்க மாளிகையில் இச்சனிக்கிழமை காலையில் சந்தித்து உரையாற்றிய போது இவ்வாறு திருத்தந்தை கூறினார்.

குருத்துவத்தைப் போலவே ஆயர் பணியும் இவ்வுலகைச் சார்ந்ததாக ஒருபொழுதும் தவறாகப் புரிந்து கொள்ளப்படக் கூடாது, மாறாக ஆயர் பணி அன்பின் பணி, ஆயர் கிறிஸ்துவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி திருச்சபைக்கு ஊழியம் செய்ய அழைக்கப்பட்டிருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆயர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மந்தை துன்பங்களை எதிர் கொள்ளும் போது மனம் சோர்ந்து விடாமல் திருச்சபையை வழிநடத்தும் தூயஆவியில் நம்பிக்கை வைத்து புதிய நற்செய்திப் பணிகளில் ஈடுபடுமாறும் திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.

விசுவாசிகள் ஏழ்மையின் பல வடிவங்களில் வாழும் பகுதிகளிலும் விசுவாசத்திற்காகத் துன்பங்களை எதிர் கொள்ளும் இடங்களிலும் ஆயர்கள் சந்திக்கும் சவால்களைத் தான் அறிந்தே இருப்பதாகவும் அச்சமயங்களில் கிறிஸ்துவின் அன்பில் நம்பிக்கை வைத்து வாழ வேண்டுமெனவும் அவர் பரிந்துரைத்தார்.

திருப்பீட விசுவாசபரப்புப் பேராயம் இந்தப் புதிய ஆயர்களுக்கு உரோமையில் கருத்தரங்கை நடத்தி வருகிறது. அதன் ஒரு நிகழ்ச்சியாக ஆயர்கள் திருத்தந்தையைச் சந்தித்தனர்.







All the contents on this site are copyrighted ©.