2010-09-10 15:52:52

பிரேசில் கத்தோலிக்கரில் ஆழமான விசுவாச வாழ்வைக் கட்டி எழுப்புவதற்கு விறுவிறுப்பான நற்செயதிப் பணி இன்றியமையாதது - திருத்தந்தை


செப்.10,2010. பிரேசில் நாட்டுக் கத்தோலிக்கரில் ஆழமான விசுவாச வாழ்வைக் கட்டி எழுப்புவதற்கு அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருச்சபை விறுவிறுப்பான நற்செய்திப் பணியில் ஈடுபட வேண்டியது இக்காலத்திய இன்றியமையாதத் தேவையாக இருக்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

பிரேசிலில் புதிய புதிய கிறிஸ்தவப் பிரிவினைவாதக் குழுக்கள் வேகமாக வளர்ந்து வரும் வேளை, பல கத்தோலிக்கர் திருச்சபை வாழ்விலிருந்து அல்லது திருச்சபையிலிருந்தே விலகி வாழ்வது கவலை அளிப்பதாக உள்ளது என்ற திருத்தந்தை, இவை கத்தோலிக்கரின் விசுவாச வாழ்வு பலவீனமானதாகவும் மேலோட்டமானதாகவும் இருப்பதையே உணர்த்துகின்றன என்றும் கூறினார்.

அதேவேளை இன்று மக்கள் மத்தியில் கடவுள் மீதான தாகம் ஏற்பட்டுள்ளதைப் பரவலாகக் காண முடிகின்றது என்றார்.

பிரேசிலின் வடகிழக்குப் பகுதியின் 28 ஆயர்களை அட் லிமினா சந்திப்பை முன்னிட்டு இவ்வெள்ளியன்று காஸ்தெல் கந்தோல்போவில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

கத்தோலிக்கர் இயேசு கிறிஸ்துவோடு கொள்ளும் ஆள்-ஆள் உறவை அடிப்படையாகக் கொண்ட விசுவாச வாழ்வை வளர்க்க வேண்டியது ஆயர்களின் கடமை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

கத்தோலிக்க நாடான பிரேசிலின் இன்றைய சமுதாயத்தில் நற்செய்தி விழுமியங்களை ஊக்குவித்து வளர்ப்பதற்கு கிறிஸ்தவர்கள் மத்தியில் உரையாடல் தவிர்க்க முடியாததாய் இருக்கின்றது என்று திருத்தந்தை கூறினார்.

500க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னரே நற்செய்தி அறிவிக்கப்பட்டது மற்றும் முதல் திருப்பலி நிகழ்த்தப்பட்ட பிரேசில் நாட்டின் கிறிஸ்தவ வேர்கள் பற்றியும் ஆயர்களிடம் நினைவுபடுத்தினார் திருத்தந்தை.







All the contents on this site are copyrighted ©.