2010-09-10 15:56:38

அமெரிக்காவில் குரான் எரிப்புத் திட்டம் இரத்து செய்யப்படவில்லை, மாறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறித்து பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் கலக்கம்


செப்.10,2010. அமெரிக்க ஐக்கிய நாட்டு ஃபுளோரிடா கிறிஸ்தவ சபை பாதிரியார் ஒருவர், குரானின் நகல்களை எரிப்பதற்கானத் தனது திட்டத்தை இரத்து செய்யவில்லை, ஆனால் தனது திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளார் என்ற செய்தி பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.

ஃபுளோரிடாவின் Gainesville விலுள்ள Dove World Outreach மையத்தின் கிறிஸ்தவப் பாதிரியார் டெரி ஜோன்ஸ், நியுயார்க் உலக வர்த்தக மையம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளான செப்டம்பர் 11ஐ "சர்வதேச குரான் எரிப்பு தினம்” என அறிவித்து அந்நாளான இச்சனிக்கிழமையன்று இசுலாமியர்களின் புனித நூலான குரானின் நகல்களை எரிக்கவிருப்பதாக அறிவித்திருந்தார்.

இந்நடவடிக்கை கத்தோலிக்கத் திருச்சபை, அமெரிக்க அதிபர் ஒபாமா உட்பட சர்வதேச அளவில் பெரும் கண்டனத்துக்கு உள்ளாகியிருந்தது.

இவ்வேளையில், உலக வர்த்தக மையம் இருந்த இடத்துக்கு அருகில் கட்டுவதாய்த் திட்டமிடப்பட்டிருந்த இஸ்லாமியக் கலாச்சார மையத்தை வேறு இடத்துக்கு மாற்றவிருப்பதாக உள்ளூர் இமாம் கூறியதால் குரான் எரிப்புத் திட்டத்தைத் தான் கைவிட்டதாகத் தெரிவித்தார் ஜோன்ஸ்.

ஆயினும் இத்தகவல் உண்மையல்ல எனத் தெரிய வருவதால் ஜோன்ஸ் தனது குரான் எரிப்புத் திட்டத்தை மீண்டும் பரிசீலனை செய்யவிருப்பதாகக் கூறியதாக ஊடகங்கள் அறிவித்துள்ளன.

மசூதியை வேறு இடத்துக்கு மாற்ற உறுதி அளிக்கப்பட்டதாக ஜோன்ஸ் கூறுவதை அந்த இஸ்லாமிய மையம் உடனடியாக மறுத்துள்ளது.

இதற்கிடையே, குரான் எரிக்கப்பட்டால் தாங்கள் பதிலடி கொடுப்பதற்குத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் இசுலாம் தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர். ஏற்கனவே பாகிஸ்தானின் நரோவால் நகரில் மூன்று கிறிஸ்தவக் கோவில்கள் தாக்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.