2010-09-09 15:18:43

சட்ட மாற்றம் கொண்டு வர முயலும் ராஜபக்சவுக்கு எதிராக, இலங்கையில் அமைதிப் போராட்டம்


செப்.09, 2010 இலங்கை கொழும்புவில் உள்ள புனித பிலிப் நேரி ஆலயத்திற்கு முன் செபமாலை செபித்தபடியே குருக்கள், துறவியர், மக்கள் ஆகியோர் ஓர் அமைதிப் போராட்டத்தில் இப்புதனன்று ஈடுபட்டனர்.
அரசுத் தலைவர் ராஜபக்ச தன் பதவி காலத்தை மேலும் நீட்டிக்கும் வகையில் சட்ட மாற்றம் ஒன்றை கொண்டு வரும் பொருட்டு, இலங்கைப் பாராளு மன்றத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் விவாதங்கள் நாட்டிற்கு நலம் விளைவிக்காது என்ற நோக்கத்துடன் இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
தற்போதைய இலங்கை அரசு சட்டப்படி, அரசுத் தலைவர் ஒருவர் பதவி காலத்தில் இரு முறை மட்டுமே இருக்க முடியும். மூன்றாவது முறையாக அவர் அரசுத் தலைவர் தேர்தலுக்குப் போட்டியிட முடியாது.
தற்போது பாராளு மன்றத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த விவாதங்கள் அரசுத் தலைவருக்குச் சாதகமாக முடிந்தால், அது அரசுத் தலைவருக்கு மேலும் பல அதிகாரங்களை வழங்குவதோடு, அவர் எத்தனை முறைகள் வேண்டுமானாலும் அரசுத் தலைவராகப் போட்டியிட அதிகாரம் வழங்கும் என்று தெரிகிறது.இலங்கை மக்களின் ஆன்மீக வழிகாட்டிகள் என்ற முறையில் இலங்கை ஆயர் பேரவை இந்த விடயத்தில் தன் கருத்தை வெளியிட்டுள்ளது. எந்த ஒரு சட்டச் சீர்திருத்தமும் அனைத்து மக்களின் நலனில் கொண்டுள்ள அக்கறையின் பேரில் கொண்டு வரப்பட வேண்டும் என்றும், எந்த ஒரு குடியரசும் ஒளிவு மறைவற்ற, நம்பகத் தன்மை மிகுந்த வகையில் செயல்பட வேண்டுமென்றும் ஆயர்கள் இவ்வறிக்கையில் கூறியுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.