2010-09-09 15:17:50

குரானை எரிக்கப்போவதாக அறிவித்துள்ள திட்டத்திற்கு, வத்திக்கானின் வலுவான கண்டனம்


செப்.09, 2010 வருகிற சனிக்கிழமை குரானை எரிக்கப்போவதாக அறிவித்துள்ள ஒரு அமெரிக்கக் குழுவின் திட்டத்தைக் கண்டித்து உலகமெங்கும் எழுந்துள்ள கண்டனங்களுடன் தனது வலுவான கண்டனத்தையும் வத்திக்கான் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற ஓர் அறிவிப்பு பெரிதும் அதிர்ச்சியையும், கவலையையும் விளைவிக்கும் ஒன்று என பல்சமய உரையாடலுக்கான திருப்பீட அவை இப்புதனன்று கூறியுள்ளது.
அமெரிக்காவில் 2001ம் ஆண்டு நடந்த வன்முறைத் தாக்குதலுக்கு எதிராக ஒரு புனித புத்தகத்தை எரிப்பது மதியற்ற ஒரு செயல் என்றும், ஒவ்வொரு மதமும் தனது புனித புத்தகங்கள், வழிபாட்டுத் தலங்கள், மத அடையாளங்கள் இவற்றைப் பாதுகாக்க உரிமை பெற்றுள்ளதை ஒவ்வொருவரும் மதிக்க வேண்டும் என்றும் திருப்பீட அவையின் இந்த கூற்று தெளிவுபடுத்தியது.
"மதத்தின் பெயரால் வன்முறையை வளர்க்கும் எந்தச் செயல்பாடும் உலகின் உயர்ந்த மதங்களின் அடிப்படை போதனைகளுக்கு முரணானவை" என்று மறைந்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், 1999ம் ஆண்டு திருப்பீடத்திற்கான பாகிஸ்தான் தூதரிடம் கூறிய வார்த்தைகளை இந்த அவை எடுத்துக் காட்டியுள்ளது.
மேலும், "எந்த ஒரு தாக்குதலுக்கும் வன்முறையை பதிலாக அளிப்பது ஒருபோதும் தீர்வாகாது" என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் 2006ம் ஆண்டு திருப்பீடத்திற்கான Morocco தூதரிடம் கூறிய வார்த்தைகளையும் இந்த அவை தன் கூற்றில் சுட்டிக் காட்டியுள்ளது.
கண்டனத்திற்குரிய இந்தச் செயல் குறித்து செய்தியாளர்களிடம் இப்புதனன்று பேசிய ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா.வின் சிறப்பு அதிகாரி Staffan de Mistura, வன்முறையைத் தூண்டக்கூடிய இவ்வகைச் செயல்களால் ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவும் வாய்ப்புக்கள் குறைக்கப்படும் என்றும், அங்கு தங்கியிருக்கும் அமெரிக்க வீரர்களின் உயிருக்கு ஆபத்து வரக்கூடும் என்றும் கூறினார்.இதற்கிடையே, ப்ளோரிடா மாநிலத்தில் Gainesville என்ற இடத்தில் 50 பேருக்கும் குறைவாக உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் Dove World Outreach Centreன் தலைவரும், குரான் எரிப்பு பற்றி அறிவித்தவருமான Terry Jones, கடவுள் தன்னிடம் இதைக் குறித்து வேறு எதுவும் கூறவில்லை எனில், தான் அறிவித்தபடியே குரானை எரிக்கப்போவதாகக் கூறியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.