2010-09-09 15:19:41

அமெரிக்க, ஐரோப்பிய படையெடுப்பால், ஈராக் நாட்டில் ஒரு வித முன்னேற்றமும் ஏற்படவில்லை - ஐ.நா.வின் முன்னாள் தலைமைச் செயலர்


செப்.09, 2010 ஈராக் நாட்டில் அமெரிக்க, ஐரோப்பிய படைகள் புகுந்து ஏழு ஆண்டுகள் முடிவடைந்தும், அங்கு ஒரு வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று ஐ.நா.வின் முன்னாள் தலைமைச் செயலர் கோபி அன்னன் கூறினார்.
மெக்சிகோவில், இச்செவ்வாயன்று, 10,000 பேர் கலந்து கொண்ட கருத்தரங்கு ஒன்றில் பேசுகையில், கோபி அன்னன் இவ்வாறு கூறினார்.
ஈராக்கின் மீது அமெரிக்காவும் அதன் கூட்டுப் படைகளும் படையெடுத்துச் சென்றது, தனது ஐ.நா.சேவை காலத்தின் மிக இருண்ட காலம் என்றும், இந்தப் படையெடுப்பால், ஈராக் முன்னேறுவதற்குப் பதில், பல ஆண்டுகள் பின்னேறியுள்ளது என்றும் கோபி அன்னன் விளக்கினார்.
எந்த ஒரு நாடும் அந்நிய ஆக்கிரமிப்பை விரும்புவதில்லை என்று கூறிய அன்னன், இந்த ஒரு முடிவில், ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் அதிகாரத்திற்குப் பெரிதும் சவால் விடும் வகையில் அமெரிக்க, பிரித்தானிய அரசுகள் நடந்து கொண்டன என்ற தன் வருத்தத்தை அன்னன் வெளியிட்டார்.இதுபோன்று வரலாற்றில் இனி நடக்கக் கூடாதென்றால், ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் நிரந்தர அங்கத்தினர்களின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட வேண்டுமென்றும், ஆப்ரிக்கா, ஆசியா, இலத்தீன் அமெரிக்கா ஆகிய ஒவ்வொரு பகுதியிலிருந்தும் இரு அங்கத்தினர்கள் சேர்க்கப்பட வேண்டுமென்றும் ஐ.நா.வின் முன்னாள் தலைமைச் செயலர் கோபி அன்னன் வலியுறுத்தினார்.







All the contents on this site are copyrighted ©.