2010-09-09 15:18:27

அன்னை மரியாவின் பிறந்த நாளை பெண் குழந்தைகளின் தினமாகக் கொண்டாடிய இந்தியத் திருச்சபை


செப்.09, 2010 அன்னை மரியாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8ம் தேதியை பெண் குழந்தைகளின் தினமாக இந்தியத் திருச்சபை கொண்டாடியது.

குடும்பத்திற்குள்ளும், வீட்டுக்கு வெளியிலும் பெண் குழந்தைகள் மீது காட்டப்படும் பாகுபாடுகள், வன்முறைகள் இவை அனைத்தையும் களைவதற்குப் பாடுபட வேண்டும் என்று இந்திய ஆயர் பேரவை கூறியுள்ளது.
அகில உலக ஆண் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதப்படி ஒவ்வொரு 1000 ஆண் குழந்தைகளுக்கும், 954 பெண் குழந்தைகள் பிறக்கின்றன. ஆனால், இந்தியாவில் பிறக்கும் 1000 ஆண் குழந்தைகளுக்கு 882 பெண் குழந்தைகளே பிறக்கின்றன.
கருகலைப்பு, சிசுக் கொலை இவைகளால் ஒவ்வொரு நாளும் இந்தியாவில் 7000 பெண் குழந்தைகள் இறக்கின்றனர் என்று 2006ம் ஆண்டு வெளியான UNICEF நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.
சிசுக்கொலை சட்டப்படி தண்டிக்கப்படும் குற்றம் என்றாலும், இந்தியாவில் இன்றும் இது நடந்து வருகிறதென்றும், பெண் குழந்தைகள் பிறப்புக்குப் பின்னும் பல வழிகளிலும் வேற்றுமை படுத்தப்படுகின்றனர் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.இந்தியாவில் நடக்கும் இந்த அநீதிகளுக்கு மாற்றாக அரசும், சமுதாயமும், திருச்சபையும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று இந்திய ஆயர் பேரவை மகளிர் குழுவின் செயலரான அருள்சகோதரி லில்லி பிரான்சிஸ் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.