2010-09-08 15:50:24

திருத்தந்தையின் புதன் மறைபோதகம்


செப்டம்பர் 08, 2010. கடந்த சில வாரங்களாக, திருத்தந்தையர்களின் கோடை விடுமுறை இல்லம் இருக்கும் காஸ்தல் கந்தோல்ஃபோவிலிருந்தே தன் புதன் மறைபோதகத்தை வழங்கி வந்தத் திருத்தந்தை, இவ்வாரம் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கிளம்பி வத்திக்கான் வந்தடைந்து திருத்தந்தை 6ம் சின்னப்பர் மண்டபத்தில் திருப்பயணிகளைச் சந்தித்து உரை வழங்கினார்.

கடந்த வாரம் ஜெர்மன் நாட்டைச்சேர்ந்த Bingenன் புனித Hildegard குறித்துப் பேசிய திருத்தந்தை இவ்வாரமும் அதனைத் தொடர்ந்தார்.

மத்திய காலக் கிறிஸ்தவக் கலாச்சாரம் குறித்த நம் மறைக்கல்விப் போதனையில் இன்றும், 12ம் நூற்றாண்டின் உன்னத அருட்கன்னிகையும் தியானயோகியுமான Bingenன் புனித Hildegard குறித்துக் காண்போம் என தன் மறைபோதகத்தைத் துவக்கினார் பாப்பிறை. Bingenன் புனித Hildegard கண்ட காட்சிகள் அவர் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு இறைவார்த்தையின் உயிரோட்டமுடைய தெளிவான விளக்கம் தருவதாக இருந்தன. அவை கிறிஸ்தவ அர்ப்பண வாழ்வுக்கு அழைப்பு விடுப்பதாகவும் இருந்தன. விசுவாச மறையுண்மைகளை நோக்கி ஒரு பெண்ணின் நுண்ணறிவுத்திறனைக் கொணர்ந்தார் இப்புனிதை. இறைவன் மனுவுரு எடுத்ததில் இறைவனுக்கும் மனித குலத்துக்கும் இடையே இடம்பெற்ற ஐம்புலன்களைக் கடந்த மோன நிலை இணைப்பு மற்றும் கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் இடையேயான திருமண பிணைப்பு குறித்து தன் எழுத்துகளில் மிக ஆழமாகத் தியானித்துள்ளார் Bingeninன் புனித Hildegard. கடவுளுக்கும் இயற்கைக்கும் இடையேயான உயிர்துடிப்புடைய உறவு மற்றும், புனிதம் மற்றும் ஒழுக்க ரீதி வாழ்வை வாழ்வதன் வழி நாம் இறைவனை மகிமைப்படுத்த அழைக்கப்பட்டிருக்கின்றோம் என்பவைகளை ஆழமாக ஆராய்ந்தார் அவர். பெருமகிழ்ச்சியின் உறைவிடமாய் இருக்கும் தூய ஆவியின் பெரும் இன்னிசையே அனைத்து படைப்பும் என்ற புனித Hildegard ன் ஆழமான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக அவர் இயற்றிய இசை இருந்தது. அவரின் பரந்த அறிவும் ஆன்மீக மேலாண்மையும் அவர் காலத்தையத் திருச்சபையின் புதுப்பித்தல் நோக்கி அவரை வழிநடத்திச் சென்றது. கடவுள் வழங்கிய கொடைகளின் வழி இக்காலத்தையத் திருச்சபையை வளப்படுத்த ஞானமுடைய, துணிவான மற்றும் புனித பெண்டிருக்கு உதவுமாறு புனிதை Hildegard ன் பரிந்துரையின் வழி தூயஆவியை நோக்கி மன்றாடுவோம் என தன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை அனைவருக்கும் தன் ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.