2010-09-07 15:40:21

கர்நாடக மாநிலம் கிறிஸ்தவர்க்கெதிரானத் தாக்குதல் குறித்த விசாரணை காலத்தை நீட்டித்துள்ளது


செப்.07,2010.இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் கிறிஸ்தவர்க்கெதிரானத் தாக்குதல்கள் குறித்த விசாரணைக் காலத்தை மேலும் நீட்டித்திருப்பது தலத்திருச்சபை அதிகாரிகள் மத்தியில் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் 2008ம் ஆண்டில் கிறிஸ்தவர்கள் மற்றும் அவர்களின் சொத்துக்கள் தாக்கப்பட்டது குறித்து அறிக்கைத் தாக்கல் செய்வதற்கென நியமிக்கப்பட்ட குழு தனது பணியைச் செய்து முடிப்பதற்கான காலக்கெடுவை வருகிற அக்டோபர் 31ம் தேதி வரை அரசு நீட்டித்துள்ளது.

இத்தாக்குதல்கள் இந்துத் தீவிரவாதக் குழுக்களின் தூண்டுதல்களால் இடம் பெற்றவை என்பதைச் சுட்டிக்காட்டிய 500 பக்க அறிக்கைக் கடந்த பிப்ரவரியில் சமர்ப்பிக்கப்பட்டது. எனினும், அம்மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான அரசு இவ்விசாரணைக்குழு அறிக்கை சமர்ப்பிப்பதற்கானக் காலத்தைத் தற்சமயம் ஒன்பதாவது தடவையாக நீட்டித்துள்ளது.

இந்த நீட்டிப்பு நியாயமானதே என்று கூறியுள்ள பெல்லாரி ஆயர் ஹென்றி டிசூசா, இத்தாக்குதல்கள் தொடர்பாக நூற்றுக்கணக்கான வழக்குகளை இவ்விசாரணைக்குழு நடத்தவேண்டியிருக்கின்றது என்று கருத்து தெரிவித்தார்.

ஓய்வுபெற்ற நீதிபதி பி.கே.சோமஷேகரா தலைமையிலான குழு இதுவரை 1019 புகார்களைப் பெற்றுள்ளது. இன்னும், கிறிஸ்தவ மற்றும் இந்து மத நிறுவனங்களின் பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் என சுமார் 800 சாட்சியங்களையும் விசாரித்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.