2010-09-06 15:27:14

செப்டம்பர் 07 நாளும் ஒரு நல்லெண்ணம்


அந்த அறிவியல்ஆய்வுக்கூடத்தில் ஏறத்தாழ எழுபது விஞ்ஞானிகள் ஒரு கடினமான அறிவியல் ஆய்வில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த ஆய்வின் அழுத்தம், அந்த ஆய்வுக்கூட இயக்குனரின் கண்டிப்பு அந்த விஞ்ஞானிகளைச் சோர்வடையச் செய்தாலும் அவர்கள் ஒவ்வொருவருமே அந்தத் தலைவருக்குப் பிரமாணிக்கமாக இருந்தார்கள். அந்த வேலையை விட்டுச் செல்லவும் யாரும் விரும்பவில்லை. ஒருநாள் ஒரு விஞ்ஞானி காலையில் வேலைக்கு வந்தவுடன் இயக்குனரிடம், ஐயா, நான் இன்று மாலை 5.30 மணிக்கு அலுவலகத்தைவிட்டுச் செல்ல வேண்டும். என் குழந்தைகளை கண்காட்சித் திடலுக்கு அழைத்துச் செல்வதாய் உறுதியளித்து வந்துள்ளேன் என்றார். அந்த இயக்குனரும் நீங்கள் தாராளமாகப் போகலாம் என்றார். அன்று மதிய உணவுக்குப் பின்னர் மீண்டும் ஆய்வில் மூழ்கிய அந்த விஞ்ஞானி அவரது வேலையை முடித்த போது இரவு 8.30. நேரம் போனதே தெரியாமல் ஆராய்ச்சியில் மூழ்கி விட்டார். ஒருவித குற்றவுணர்வுடன் அன்று வீடு திரும்பினார். அவர் வீடு சேர்ந்த போது குழந்தைகளைக் காணவில்லை. அவரது மனைவி மட்டும் தனியாகத் தினத்தாள் வாசித்துக் கொண்டிருந்தாள். பின்புதான் அவருக்குத் தெரிந்தது அவரது இயக்குனர் வீட்டிற்குச் சென்று அவரது குழந்தைகளைக் கண்காட்சித் திடலுக்கு அழைத்துச் சென்றுவிட்டார் என்று.

அந்த இயக்குனர் வேறு யாரும் இல்லை. இந்திய முன்னாள் அரசுத்தலைவர் அப்துல்கலாம்தான். இந்திய விண்வெளி ஆய்வுக்கூடத்தில் அவர் இயக்குனராய் இருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்துல்கலாம் சொல்லியிருக்கிறார் – காலத்தின் மணற்பரப்பில் உன் காலடிச் சுவடுகளைப் பதிக்க விரும்பினால் உனது கால்களை இழுத்து இழுத்து நடக்காதே என்று







All the contents on this site are copyrighted ©.