2010-09-06 15:39:01

சமுதாய சிற்பிகள் (ஆசிரியர்கள்)


செப்.06,2010. ஒரு சமயம் அரிஸ்டாட்டில் தம் மாணவர்களுடன் ஓர் ஆற்றின் கரைக்கு வந்தார். மாணவர்களை ஆற்றங்கரையில் நிற்க வைத்த அரிஸ்டாட்டில், நான் ஆற்றின் அக்கரை வரையில் சென்று ஆற்றில் ஏதாவது சுழல்கள் உள்ளதா எனப் பார்த்து வருகிறேன் என்றார். அவர் அதற்குத் தயார் கொண்டிருந்த சமயம், அவரின் மாணவர் யுவந்துஸ் தண்ணீரில் நீந்திச் செல்வதைக் கண்டார். மறுகரை வரை சென்று திரும்பிய யுவந்துஸ், குருவே, சுழல்கள் இல்லை, நாம் தைரியமாய் ஆற்றைக் கடக்கலாம் என்றார். அப்போது அரிஸ்டாட்டில் அவனிடம், உன்னைச் சுழல்கள் இழுத்துச் சென்றிருந்தால் என்னவாகி இருக்கும் என்றார். அதற்கு அவன், இந்த யுவந்துஸ் போனால், ஆயிரம் யுவந்துஸ்களை உருவாக்கும் வல்லமை உள்ளவர் நீங்கள். ஆனால் ஓர் அரிதான குருவை இழந்தால் நாங்கள் பரிதவித்துப் போவோம் என்றான். அன்பு வானொலி நண்பர்களே, ஆசிரியர் - மாணவர் உறவு இப்படி அமைந்து இருந்தால் எந்த ஒருச் சமூகமும் நல்லதொரு மக்கள்குலமாகப் புது மணம் பரப்பும். சுவாமி விவேகானந்தர் சொல்வார் – “ஒரு நல்ல ஞானம் நிறைந்த ஆசிரியரால்தான் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்” என்று.

சமுதாயச் சிற்பிகளான இந்த ஆசிரியப் பெருமக்களுக்கு மரியாதை செலுத்தும் நோக்கத்தில் ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனமான யுனெஸ்கோ ஆண்டு தோறும் அக்டோபர் ஐந்தாம் தேதியன்று அனைத்துலக ஆசிரியர் தினத்தைச் சிறப்பிக்கின்றது. ஆயினும் பல நாடுகள் வெவ்வேறு தினங்களில் இந்நாளைச் சிறப்பிக்கின்றன. இலங்கை அக்டோபர் 5ம் தேதி சிறப்பிக்கின்றது. ஆனால் இந்தியா, நாட்டின் முதல் உதவி அரசுத்தலைவரும், இரண்டாவது அரசுத்தலைவருமான டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்த செப்டம்பர் ஐந்தாம் நாளை தேசிய ஆசிரியர் தினமாகச் சிறப்பிக்கின்றது. இந்நாளில் நல்ல ஆசிரியர்களுக்கு மாநில மற்றும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இஞ்ஞாயிறன்று தமிழக அரசின் நல்லாசிரியர் விருதைப் பெற்றிருக்கும் பல ஆசிரியர்களில் ஒருவரான திருமதி முனைவர் ஜாஸ்மின் செபத்தாய் ப்ளாரன்ஸ் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். இவர் பாளையங்கோட்டை குழந்தை இயேசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 31 ஆண்டுகளாகத் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். அப்பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியரும் இவரே. ஆசிரியர் என்பவர் யார்? மாணவர்கள் என்பவர்கள் யார்? இவர்களுக்கிடையே உறவு எப்படி இருக்க வேண்டும்? என்று நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

RealAudioMP3 ஆசிரியர்-மாணவர், இவர்களுக்கிடையேயான உறவுகள் பற்றித் தொலைபேசி வழியாகப் பேசியவர் திருமதி முனைவர் ஜாஸ்மின், குழந்தை இயேசு மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை.

அன்னையும் தந்தையும் ஒரு குழந்தையை உலகிற்குத் தருகின்றனர். ஆனால் ஓர் ஆசிரியர் உலகத்தையே குழந்தைகளுக்கு தருகிறார். இந்த ஆசிரியர்கள் இறந்த பிறகும் மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். ஆசிரியர் தொழில் புனிதமானது. தெய்வீகமானது. ஒரு சமூகம், மிகஉயர்ந்த நிலையை அடைந்து இருந்தால், நிச்சயமாக அதன் பின்னால் ஆசிரியர் சமூகம் இருக்கின்றது என்று உறுதியாகச் சொல்லலாம். வேறு எந்தத் துறையை விடவும் அதிகப் பொறுப்புகளும், அதிக முக்கியத்துவமும் நிறைந்தது ஆசிரியப் பணித்துறை. இன்று மாணவர்களுக்கு அதிகம் தேவைப்படும் ஊக்கத்தையும், தன்னம்பிக்கையையும், நன்னெறிகளையும் வழங்க வேண்டியவர்கள் இந்த நல்லாசிரியர்கள். இவர்கள் மேலும் மேலும் உயரத் தங்கள் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்களிடம் கோபப்படாமல் பொறுமையோடு கல்வி கற்பிக்க வேண்டுமென்று நெல்லையில் ஆசிரியர்தின விழாவில் தமிழக நிதியமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். அன்பர்களே, சகலகலா வல்லவர்களான நல் ஆசிரியர்கள் மேன்மேலும் வாழ, வளர வாழ்த்துவோம்.








All the contents on this site are copyrighted ©.