2010-09-04 15:34:31

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
முன்னாள் இந்திய அரசுத் தலைவர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி, இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளையொட்டி, நல்லாசிரியர் விருதுகள் வழங்குவதும் பழக்கத்தில் உள்ளது. வத்திக்கான் வானொலி நேயர் குடும்பத்திலும் பல நல்லாசிரியர்கள் உண்டு. அவர்கள் அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்.
நல்லாசிரியர் யார்? கற்றுத் தருவதை ஒரு புனிதப் பணியாக, தனிப்பட்ட ஓர் அழைப்பாக ஏற்று உழைக்கும் உயர்ந்த உள்ளங்களை நல்லாசிரியர்கள் என்று கூறுகிறோம். எனவேதான், 'ஆசிரியர்' என்ற சொல்லுக்கு தரப்பட்டுள்ள இணைச் சொற்கள், உயர்ந்த சொற்கள்: ஆசான், உபாத்தியாயர், குரு...
கல்வி, குருகுலங்களில் ஆரம்பித்ததாக இந்திய வரலாறு சொல்கிறது. குருகுலங்களை நாடி வரும் சீடர்கள் தங்கள் வீட்டை, பெற்றோரைத் துறந்து, மறந்து, குருவுடனேயே தங்கி, கல்வி கற்க வேண்டும். அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து, குளிர் நீரில் குளித்து விட்டு, வேதங்களை ஓதுவதில் ஆரம்பமாகும் அவர்கள் தினசரி வாழ்க்கை மிகவும் கடினமான ஒன்று.
குரு, சீடர் என்ற இந்தப் பாரம்பரியம் நம் நாட்டுக்கு மட்டும் உரியதன்று. இயேசு வாழ்ந்த யூத சமூகத்திலும் இருந்தது. இயேசுவின் சீடராய் இருக்க என்ன செய்ய வேண்டுமென்று இன்றைய நற்செய்தி சொல்கிறது.

லூக்கா நற்செய்தி 14 : 25-27
அக்காலத்தில், பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது: என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது. தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது.  
Dietrich Bonhoeffer (1906-1945) ஹிட்லர் காலத்தில், ஜெர்மனியில் வாழ்ந்த ஒரு லூத்தரன் சபை பணியாளர், இறையியலாளர். ஹிட்லரின் அடக்கு முறைக்கு எதிராகக் குரல் கொடுத்தவர். துன்பங்களைச் சந்தித்தவர். ஹிட்லரின் இராணுவத்தில் கட்டாயப் பயிற்சியில் சேர்வதைத் தவிர்க்க, அவர் அமேரிக்கா சென்றார். ஆனாலும், தன் சொந்த நாட்டை விட்டு வெளியேறியது அவர் மனதை உறுத்தியது. மீண்டும் ஜெர்மனிக்குத் திரும்பினார். Bonhoeffer ஜெர்மனிக்கு வந்தபின், அவரும் அவரது குடும்பத்தினரும் கைது செய்யப்பட்டனர். Flossenberg என்ற சித்ரவதை முகாமில் 1945 ஏப்ரல் 9ம் தேதி, Bonhoeffer சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு, தூக்கிலிடப்பட்டார்.
Dietrich Bonhoeffer எழுதிய ஒரு அற்புதமான, புகழ் பெற்ற புத்தகத்தின் பெயர் 'The Cost of Discipleship' அதாவது, 'சீடராவதற்குத் தர வேண்டிய விலை'. Bonhoeffer இந்தப் புத்தகத்தை வெறும் அறிவுப் பூர்வமான விளக்கமாக எழுதவில்லை. தான் அந்தப் புத்தகத்தில் விவரித்த சீடராக அவரே வாழ்ந்து காட்டினார்.

இயேசுவின் சீடராக வாழ்வதென்பது, உலகத்தோடு ஒத்துப் போகும், கும்பலோடு கும்பலாகக் கலந்து போகும், கலைந்து போகும் வாழ்வு அல்ல. Bonhoeffer விரும்பியிருந்தால், ஹிட்லரின் கொள்கைகளைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டிருக்கலாம். அல்லது, ஏற்றுக் கொண்டது போல் நடித்திருக்கலாம். 39 ஆண்டுகளே வாழ்ந்த Bonhoeffer, அமேரிக்கா சென்ற போது, அங்கேயேத் தங்கி விட்டு, போர் முடிந்தபின் ஜெர்மனி திரும்பியிருக்கலாம். இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து, பல புத்தகங்கள் எழுதி புகழ் பெற்றிருக்கலாம்.
இதைச் செய்திருக்கலாம் அதைச் செய்திருக்கலாம் என்று இங்கு நான் பட்டியல் இட்டவைகள் எல்லாமே உலக வழியில் எழும் சிந்தனைகள். ஆனால், Bonhoeffer உலகம் சொன்ன வழியை விட, இயேசு சொன்ன வழியை, இன்றைய நற்செய்தி சொன்ன வழியைத் தேர்ந்தெடுத்தார். இயேசுவின் சீடராய் வாழ்வதற்கான விலையைக் கொடுத்தார். தூக்கிலிடப்பட்டார்.

Dietrich Bonhoefferரை சாவதற்கும் துணிந்து விடும் சீடராக வாழத் தூண்டிய இயேசுவும், அவர் வாழ்ந்த காலத்தில், உலகத்தோடு ஒத்துப் போயிருந்தால், இளமையிலேயே இறந்திருக்கத் தேவையில்லை. இன்னும் பல ஆண்டுகள் மகிழ்வாய் வாழ்ந்திருந்து, இன்னும் பல ஆயிரம் அற்புதங்களைச் செய்திருக்கலாம்.
ஒவ்வொரு முறையும் அவர் அற்புதம் செய்யும் போது, இயேசுவின் புகழ் பெரிதும் பரவியது. இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகள் சொல்வது போல், ‘பெருந்திரளான மக்கள்’ இயேசுவை எப்போதும் பின்பற்றிய வண்ணம் இருந்தனர். கூட்டங்கள் சேர்ப்பதும், மக்களைத் தன் பக்கம் ஈர்த்து, தன் புகழை வளர்ப்பதுமே இயேசுவின் எண்ணங்களாய் இருந்திருந்தால், இந்த மக்கள் கூட்டத்தை எப்போதும் மகிழ்விக்கும் செய்திகளையேச் சொல்லி, புதுமைகள் செய்து, இயேசு சுகமாக வாழ்ந்திருக்கலாம். ஒரு வேளை அவர்களது அரசராகக் கூட மாறியிருக்கலாம்.

இவ்வழிகளை இயேசு பின்பற்றியிருந்தால், இன்றைய அரசியல் தலைவர்களுக்கு அவர் ஓரு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்திருப்பார். தலைமைத்துவம் என்றால் என்ன என்று இன்றைய உலகில் மேலாண்மை நிறுவனங்கள் சொல்லித் தரும் ஓர் இலக்கணமாக இயேசு இருந்திருப்பார். மேலாண்மை நிறுவனங்களில் "இயேசுவின் வழிகள்" என்பது கட்டாயப் பாடமாகவும் இருந்திருக்கும்.
இயேசுவையும், மேலாண்மை எண்ணங்களையும் இணைத்து பல புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. அவைகளில் இரண்டு என் கண்களில் பட்டன. Laurie Beth Jones, John R.Colt என்ற இருவர் இயேசுவை ஒரு பெரும் நிறுவனத்தின் தலைவராகக் கற்பனை செய்து இரு புத்தகங்கள் எழுதியுள்ளனர்.

 இயேசு, தான் வாழ்ந்த காலத்தில் மேலாண்மை பாடங்களைச் சொல்லித் தந்திருக்கிறார். “திட்டமிடத் தவறுகிறவர், தவறுவதற்குத் திட்டமிடுகிறார்.” (He who fails to plan, plans to fail) என்பது மேலாண்மைப் பாடங்கள் சொல்லும் ஓர் அரிச்சுவடி.
வாழ்வில் திட்டமிடுவது மிகவும் அவசியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒரு பாடம். நாம் சர்வ சாதாரணமாகப் பேசும்போதே, இதைப் பற்றிக் கூறுகிறோம்: “சும்மா எடுத்தோம், கவுத்தோம்னு எதையும் செஞ்சிடக் கூடாது. ஆர அமர யோசிச்சுத் தான் செய்யணும்” என்று. ஆர, அமர சிந்திப்பதைப் பற்றி இயேசு இன்றைய நற்செய்தியில் ஒரு முறை அல்ல, இரு முறை கூறியிருக்கிறார். அவர் கூறியுள்ளவைகளை நற்செய்தியிலிருந்து கேட்போம்:

லூக்கா நற்செய்தி 14: 28-32
உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா? இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக, ‘இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லைஎன்பார்களே! வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா? எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேட மாட்டாரா
ஆர அமர சிந்தித்துச் செயலில் இறங்க வேண்டும் என்ற மேலாண்மைப் பாடங்களை ஒத்தக் கருத்துக்களைக் கூறும் இயேசு, திடீரென, சற்றும் எதிர்பாராத ஒரு கருத்தையும் கூறுகிறார். அதுதான் இன்றைய நற்செய்தியின் இறுதியில் அவர் கூறும் ஒரு திருப்பம். இதை நான் வாசித்த போது, முகத்தில் குத்தப்பட்டு, தடுமாறி விழுந்ததைப் போல் உணர்ந்தேன். இயேசு, கூறும் இறுதி வார்த்தைகள் இவை:

"அப்படியே, உங்களுள் தம் உடைமையை எல்லாம் விட்டு விடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது." (லூக்கா 14: 33) 
இயேசு பயன்படுத்திய 'அப்படியே' என்ற வார்த்தைதான் முகத்தில் விடப்பட்ட குத்து போல் இருந்தது. 'அப்படியே' என்று இயேசு குறிப்பிடுவது எதை? அதற்கு முன் அவர் கூறிய அந்த இரு எடுத்துக்காட்டுகளை... இயேசு கூறுவது இதுதான்... எப்படி திட்டமிட்டு கோபுரம் எழுப்புவீர்களோ, எப்படி திட்டமிட்டு போருக்குச் செல்வீர்களோ, அப்படியே தம் உடைமையை எல்லாம் விட்டு விடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.
மேலோட்டமாய் இந்த விவிலியப் பகுதியை வாசித்தால், இயேசு அந்த இரு எடுத்துக்காட்டுகளில் கூறிய கருத்தும், அந்த இறுதி வாக்கியத்தில் சொல்வதும் ஒன்றுக்கொன்று முரணான, தொடர்பில்லாத எண்ணங்களைப் போல் தெரியும். ஆனால், இந்த வாக்கியத்தை ஆழமாகச் சிந்தித்தால், Punch dialogue அல்லது Punch line என்று நாம் சொல்லும் பாணியில், இயேசு இந்த வரிகளில் ஓர் உண்மைச் சீடனுக்குரிய சவாலை முன் வைக்கிறார். இதைத் தான் முகத்தில் விழும் குத்து என்று சொன்னேன்.

ஒரு கோபுரம் கட்டுபவர் இரவும் பகலும் அதைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பார். ஒரு போருக்குச் செல்பவர் அதேபோல், அல்லது, இன்னும் தீவிர எண்ணம் கொண்டிருப்பார், அத்துடன் துணிவும் கொண்டிருப்பார். அதேபோல், இயேசுவைப் பின் தொடர்வதிலும் இரவும் பகலும் ஒரே தீவிர எண்ணம் வேண்டும், துணிவு வேண்டும் என்பதைத் தான் அந்த 'அப்படியே' என்ற வார்த்தை சொல்வதாக நான் எண்ணிப் பார்க்கிறேன். சீடராக இயேசுவைப் பின் பற்றுவதென்பது ஏதோ ஓரிரவில் தோன்றி மறையும் அழகான, ரம்மியமான கனவு அல்ல. மாறாக, வாழ்நாள் முழவதும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இரவும் பகலும் நம் சிந்தனை, சொல், செயல் இவைகளை நிறைக்க வேண்டிய ஒரு தாகம் என்பதைத் தான் இயேசு இந்த வரிகளில் சொல்லியிருக்கிறார்.
பணத்திற்காக, இன்னும் பிற புகழ், பெருமைகளுக்காக, ஏதோ ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்பதற்காக தூக்கம் மறந்து, உணவை மறந்து, குடும்பத்தை மறந்து உழைக்கும் பலரைப் பார்த்திருக்கிறோம். தாங்கள் ஆரம்பித்ததை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்று அவர்கள் கொண்டுள்ள அந்தத் தீவிரத்தை, வெறியை தன் சீடர்கள் கொண்டிருக்க வேண்டும் என்று இயேசு எதிர்பார்க்கிறார்.
இறுதியாக ஓர் எண்ணம்... இயேசுவின் சீடர்கள் என்று இன்று நாம் பகிர்ந்த சிந்தனைகள் எல்லாம், குருக்கள், துறவறத்தாருக்கு என்று எண்ணி, தப்பித்துக் கொள்ளவேண்டாம், அன்பர்களே. இயேசு இந்த வார்த்தைகளைத் தன் சீடர்களுடன் தனித்து இருக்கும் போது சொல்லவில்லை... மாறாக, தன்னைப் பின் தொடர்ந்த ‘பெருந்திரளான மக்களை’ நோக்கி, நம் ஒவ்வொருவரையும் நோக்கிச் சொல்கிறார்.
 தியாகங்களுக்குத் தயாராக இல்லாத உள்ளங்கள் என்னைப் பின் தொடர்வது இயலாது என்று கூறும் இயேசுவுக்கு நமது பதில் என்ன?







All the contents on this site are copyrighted ©.