2010-09-04 15:33:50

செப்டம்பர் 05, நாளுமொரு நல்லெண்ணம்


பார்வைத் திறனற்ற ஒருவர் சாலையைக் கடக்கக் காத்திருந்தார். அப்போது அவரது தோளை ஒருவர் தட்டி, "என்னைத் தயவுசெய்து சாலைக்கு அந்தப் பக்கம் கூட்டிச் செல்கிறீர்களா? எனக்குப் பார்வைத் திறன் இல்லை." என்று சொன்னார். பார்வைத் திறன் அற்றதால் சாலையைக் கடக்க தயங்கிக் காத்திருந்த இவர், மற்றொரு பார்வைத் திறன் அற்றவரை வழி நடத்த, இருவரும் சாலையைக் கடந்தனர்.
இந்த நிகழ்வு தன் வாழ்வில் நடந்ததென George Shearing என்பவர் கூறியுள்ளார். George பிறந்தது முதல் பார்வைத் திறனை இழந்தவர். Jazz பியானோ வாசிப்பதில் தனித் திறனும், புகழும் பெற்றவர். நூற்றுக்கும் அதிகமான இசைத் தட்டுகள் வெளியிட்டுள்ளார். அன்று பார்வைத் திறனற்ற மற்றொருவரை அழைத்துக் கொண்டு சாலையைக் கடந்தது, தன் வாழ்வில் நடந்த விறுவிறுப்பான ஒரு சம்பவம் என்று ஜார்ஜ் கூறியுள்ளார்.
தயங்கி நிற்கும் வேளையிலும், வாய்ப்புக்கள் வந்து நம் தோளைத் தட்டும்.
“வாழ்க்கை ஒரு வாக்குறுதி... நிறைவேற்று.
வாழ்க்கை ஒரு கனவு... நனவாக்கு.
வாழ்க்கை ஒரு வாய்ப்பு... அதைப் பயன்படுத்து.”செப்டம்பர் 5 இறையடி சேர்ந்த அன்னை தெரேசா கூறிய பொன்மொழியின் ஒரு பகுதி இது.







All the contents on this site are copyrighted ©.