2010-09-04 12:51:46

செப்டம்பர் 04. நாளும் ஒரு நல்லெண்ணம்


"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்"

கோபம் ஏன் ஏற்படுகின்றது? என்று என்றாவது நாம் அமர்ந்து சிந்தித்திருக்கின்றோமா?

கோபத்தின் விளைவுகள் குறித்து ஆய்வுச் செய்திருக்கின்றோமா?

உடல் ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமாக இதனால் ஏற்படும் இழப்புகள் குறித்து நாம் கவலை கொண்டுள்ளோமா?

இவைகளை நிவர்த்திச் செய்யும் நிலைகள் குறித்து ஆராய்ந்திருக்கிறோமா?

நாம் மதிக்கப்படாதபோது, நம் பிரச்னைகள் புரிந்துகொள்ளப்படாதபோது, விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நமக்கில்லாதபோது, எதிர்பார்த்தவைகள் கிட்டாதபோது, சிந்திக்காமல் வரும் அதிருப்தியான வெளிப்பாடு தானே கோபம்.

கோபத்தால் நம் சிந்தனை, கவனம் சிதறடிக்கப்படுகிறது. மகிழ்வு மாயமாகிறது. மன இறுக்கம் உருவாகி இதய நோய்க்கு வழியாகிறது.

இத்தகையக் கோபத்தை கூடவே எடுத்துச்செல்வதால் நம் மதிப்பும், அமைதியும், வாழ்வும் தான் கெடுகிறது.

முதலில் வெறுப்பைக் கைவிடுவோம். மற்றவர்களையும் அன்போடு நோக்குவோம். கோபமூட்டிய நபரின் சூழ்நிலையைச் சிந்திப்போம். கோபச்சூழல்களைத் தவிர்த்து மனதை வேறு பக்கம் செலுத்துவோம். கோபம் வரும்போது மௌனத்தைக் கடைபிடிப்போம். கோபத்தை உள்ளுக்குள்ளேயே அடக்காமல் ஆபத்தில்லாத வழிகளில் வெளிப்படுத்தப் பார்ப்போம்.

பின்னர் வருந்துவதை விட முதலிலேயே அதன் விளைவுகளைச் சிந்தித்து அது குறித்து சிந்தித்துச் செயல்படுவோம்.

நீண்ட நாள் சந்தோசமாக வாழ விரும்புவோர் கோபத்தைக் குறைத்தேயாகவேண்டும்.

ஆம். பிறருக்காக நீண்ட நாள் வாழ்ந்தேயாகவேண்டியவர்கள் நாம்.








All the contents on this site are copyrighted ©.