2010-09-02 15:48:35

பாகிஸ்தானில் சிறுபான்மையினர் வாழும் பகுதிகள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன


செப்.02,2010. பாகிஸ்தானில் சிறுபான்மையினர் அதிகம் வாழும் பகுதிகளுக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படாததால், அந்தப் பகுதிகள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன என்று நம்புதற்குரிய கிறிஸ்தவ வட்டாரங்கள் கூறுகின்றன.

பாகிஸ்தான் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள ACN என்ற பன்னாட்டு கத்தோலிக்க பிறரன்புப் பணி அமைப்பினருடன் உரையாடிய கிறிஸ்தவர்கள் இவ்வாறு கூறினர்.

சிந்து நதி கரைபுரண்டு ஓடிய வேளையில், சிறுபான்மையினர் அதிகம் வாழும் சிந்து மாநிலப் பகுதிகளில் உள்ள கரைகளை அரசு பராமரிப்புத் துறை வலுப்படுத்தாமல் விட்டு விட்டதாலும், அதிகப்படியான நீர் வழிந்தோட வேண்டிய கால்வாய்களை அடைத்து விட்டதாலும் அந்தப் பகுதிகள் வெள்ளத்தால் நிறைந்தன என்று கிறிஸ்தவ வட்டாரங்களிலிருந்து புகார்கள் எழுந்துள்ளன.

இவ்வாறு, நதி கரைபுரண்டு ஓடிய அதே வேளையில், பெரும் கால்வாய்கள் நீரின்றி காய்ந்து இருந்ததைப் பார்க்கும் போது, அரசு சிறுபான்மையினர் வாழும் பகுதிகளைக் குறி வைத்து இது போன்று செய்துள்ளதோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளதேன்று கூறப்பட்டுள்ளது.

95 விழுக்காடு மக்கள் முஸ்லிம்களாய் வாழும் பாகிஸ்தானில் சிந்து மாநிலத்தில் மட்டும் சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள், இந்துக்கள், சீக்கியர்கள் அதிகம் வாழ்கின்றனர் என்றும், அவர்கள் ஓரளவு சுதந்திரத்துடன் தங்கள் மதங்களைப் பின்பற்றி வருகின்றனர் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

அப்பகுதிகளில் பணி புரியும் கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு இதுவரை 70,000 டாலர்கள் அளவு உதவிகள் செய்துள்ளது என்றும், இச்செவ்வாயன்று, மேலும் 51,000 டாலர்கள் நிதியை வழங்கியுள்ளதென்றும் இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.

இதற்கிடையே, செல்வந்தர்கள் பலர் தங்கள் நிலங்களைப் பாதுகாக்க வேண்டி, வெள்ள நீரை திசை திருப்பினர் என்பதற்கு வேண்டிய ஆதாரங்கள் உள்ளன என்றும், மனிதாபிமானமற்ற இந்தச் செயல் தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டுமென்றும் ஐ.நா.வின் தூதர் அப்துல்லா ஹுசெய்ன் கூறியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.