2010-09-02 15:44:03

இஸ்ரேல் அரசுத் தலைவர், திருத்தந்தை சந்திப்பு


செப்.02,2010. வாஷிங்டனில் இவ்வியாழனன்று தொடங்கியுள்ள இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத் தலைவர்களுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற வேண்டும் என்ற தனது ஆவலைத் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவர் பராக் ஒபாமாவின் முயற்சியினால், இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu மற்றும் பாலஸ்தீனத் தலைவர் Mahmoud Abbas வாஷிங்டனில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளவேளை, இஸ்ரேல் அரசுத் தலைவர் Shimon Peres இவ்வியாழனன்று காஸ்தெல் கந்தோல்போவில் திருத்தந்தையை 40 நிமிடம் தனியே சந்தித்துப் பேசியுள்ளார்.

இச்சந்திப்பு குறித்து செய்தி வெளியிட்ட திருப்பீட பத்திரிகை அலுவலகம், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய மக்களின் நீதியான ஏக்கங்கள் மதிக்கப்படுவதன் சூழலில் புனித பூமியிலும் மத்திய கிழக்குப் பகுதியிலும் நிலைத்த அமைதி ஏற்பட வேண்டும் என்ற தனது ஆவலைத் திருத்தந்தை தெரிவித்ததாக அறிவித்தது.

அப்பகுதியில் இடம் பெறும் எல்லாவிதமான வன்முறைகளையும் கண்டித்தத் திருத்தந்தை பல்சமய உரையாடல் மற்றும் சர்வதேச நிலவரம் குறித்தும் இஸ்ரேல் தலைவரோடு கலந்து பேசினார் என்றும் அவ்வலுவலகம் கூறியது.

இஸ்ரேலுக்கும் திருப்பீடத்துக்கும் இடையேயான உறவுகள் குறித்தும், இவ்விரு நாடுகளின் விவகாரங்கள் குறித்தப் பணிக்குழுவின் நடவடிக்கைகள் குறித்தும் இச்சந்திப்பில் பேசப்பட்டதாக அவ்வலுவலகம் மேலும் கூறியது.

இச்சந்திப்புக்கு முன்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுக்கிடையேயான திருப்பீடச் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் அரைமணி நேரம் சந்தித்துப் பேசினார் இஸ்ரேல் அரசுத் தலைவர் ஷிமோன் பேரெஸ்.








All the contents on this site are copyrighted ©.