2010-09-02 15:52:48

இந்திய பாரம்பரிய விலங்காக யானை


செப்.02,2010. இந்தியாவின் தேசிய விலங்காக புலி உள்ள நிலையில், யானையை இந்தியாவின் பாரம்பரிய விலங்கினமாக விரைவில் அறிவிக்கப்பட உள்ளது

இந்தியக் காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

புலிகளைப் பாதுகாக்க தேசிய புலிகள் பாதுகாப்பு அமைப்பு உள்ளதைப் போல, யானைகளைப் பாதுகாப்பதற்கும் தேசிய யானைகள் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்படும் என்றும், அதற்காக வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார்.

யானைகளைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசால் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவொன்று இச்செவ்வாயன்று அரசிடம் சமர்ப்பித்த பரிந்துரைகளின் அடிப்படையில்தான் இந்த முடிவுகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

புலிகளை உரிய நேரத்தில் பாதுகாக்கத் தவறியதால்தான் தற்போது புலிகளின் எண்ணிக்கை மிகமிகக் குறைந்துவிட்டதாகக் கூறும் இக்குழுவினர், அதே நிலை யானைகளுக்கும் வந்துவிடாமல் தடுக்க வேண்டியது அவசியம் என்று கூறுகின்றனர்.

இந்தியாவில் தற்போது சுமார் 25 ஆயிரம் யானைகள் உள்ள நிலையில், அதில் 3,500 யானைகள், விலங்கியல் பூங்காக்கள், கோயில்கள் உள்ளிட்ட இடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக இவ்வுயர்நிலைக்குழு கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.