2010-09-01 16:24:14

திருத்தந்தையின் புதன் மறைபோதகம்


செப்டம்பர் 01, 2010. கோடை காலத்தை திருத்தந்தையர்களின் விடுமுறை இல்லம் இருக்கும் காஸ்தல்கண்டோல்ஃபோவில் செலவிட்டு வரும் திருத்தந்தை அங்கிருந்தே இவ்வாரமும் தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கினார்.

ஆகஸ்ட் மாதம் முழுவதும் அம்மாளிகை பால்கனியிலிருந்து தன் மறை போதகத்தையும், மூவேளை ஜெப உரைகளையும் வழங்கி வந்த திருத்தந்தை, இப்புதனன்று அம்மாளிகையின் முன் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறு மேடையில் அமர்ந்து அங்கு குழுமியிருந்த விசுவாசிகளுக்கு ஜெர்மன் நாட்டு புனிதை பிங்கெனின் ஹில்டெகார்ட் குறித்து எடுத்துரைத்தார்.

1098ம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த இப்புனிதை இளம் வயதிலேயே பக்தி நிறைந்தவராயும், துறவு வாழ்வில் வெகு நாட்டம் உடையவராகவும் இருந்தார்.

அடைபட்ட துறவு மடத்தில் பயிற்சி பெற்று இளவயதிலேயே துறவியான புனிதை ஹில்டெகார்ட், 1136ம் ஆண்டு அதாவது அவரின் 38ம் வயதிலேயே அம்மடத்தின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தன் வாழ்நாளில் பல காட்சிகளை, இறைவெளிப்படுகளைக் கண்டார். ஆனாலும் அவைகளைக் குறித்துப் பிறருக்கு வெளிப்படுத்தத் தயங்கினார். இவை இறைவெளிப்பாடுகள்தானா அல்லது வெறும் மயக்கமா எனக் குழம்பியதே அதற்கு காரணம். ஆனால் இவரின் காட்சிகள் குறித்து அறிய வந்த திருத்தந்தை மூன்றாம் யூஜின் அவை குறித்து வெளிஉலகிற்கு தெரிவிக்குமாறு இவருக்கு அனுமதி வழங்கினார். அதன் பின்னர் இவரைக் குறித்து வெளி உலகிற்கு அதிகம் அதிகமாகத் தெரிய வந்தது. இவர் ஒரு தியான யோகியாய், கவிஞராய், இறைவாக்குரைப்பவராய் இருந்தார். 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தத் தியான யோகி தன் ஆன்மீக கொடைகளை திருச்சபையின் புதுப்பித்தலுக்கும், உண்மையானக் கிறிஸ்தவ வாழ்வை பரப்புவதற்கும் செலவிட்டார். இக்காலப் பெண்டிரும் திருச்சபைக்குத் தங்கள் பங்கை வழங்க அழைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை நினைவூட்டி நிற்கின்றாள் புனிதை ஹில்டெகார்ட் என்ற திருத்தந்தை, வரும் வாரமும் இவரைக் குறித்தே தன் மறைபோதனைகளைத் தொடர உள்ளதாகக் கூறினார். பின் அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.








All the contents on this site are copyrighted ©.