2010-09-01 16:11:25

ஆசியப் பொதுநிலையினர் மாநாடு கிறிஸ்தவராய் இருப்பதன் அழகைக் கண்டுணர உதவும் - கர்தினால் ரில்கோ


செப்.01, 2010 மேலும், இம்மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய திருப்பீடப் பொதுநிலையினர் அவைத் தலைவர் கர்தினால் ஸ்தனிஸ்லாவ் ரில்கோ, இம்மாநாடு கிறிஸ்தவராய் இருப்பதன் அழகைக் கண்டுணர உதவுவதாய் இருக்கும் என்றார்.

அதேசமயம் கிறிஸ்தவராய் இருப்பதில் பெருமை கொள்ள வேண்டும் என்றும் உரைத்த கர்தினால் ரில்கோ, ஆசியக் கண்டத்தில் கிறிஸ்தவர் சிறுபான்மையினராக இருந்தாலும் அவர்கள் படைப்பாற்றல் திறன்மிக்க சிறுபான்மை சமூகமாக இருக்கின்றது என்று கூறினார்.

கிறிஸ்தவ விசுவாசத்தில் நன்கு பயிற்சி பெற்ற, மிகுந்த ஆர்வமுள்ள மற்றும் தங்களது கிறிஸ்தவ அழைப்பை அதிகமதிகமாக உணர்ந்து வரும் பொதுநிலை கத்தோலிக்கர் ஆசியத் திருச்சபைகளில் அதிகரித்து வருவது மிகுந்த நம்பிக்கையூட்டுவதாக இருக்கின்றது என்றும் அவர் கூறினார்.

ஆசியா தனது தொழிற்நுட்பம் மற்றும் பொருளாதார வளர்ச்சியினால் தாராளமயமாக்கப்பட்ட உலகின் சதுரங்க விளையாட்டுத் தளத்தில் சிக்கியுள்ளது, அதேவேளை அக்கண்டத்தில் காணப்படும் சமத்துவமின்மைகள், கடும் வறுமை, உரிமை மீறல்கள் போன்ற கடும் சமூகப் பிரச்சனைகளும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கடவுளுக்கு விருப்பமானால் இந்த மாநாடு நம் அனைவருக்கும் கிறிஸ்தவ நம்பிக்கையின் புதிய நம்பிக்கையாக அமையும் என்றும் தெரிவித்தார் கர்தினால் ரில்கோ.

ஏறத்தாழ இருபது ஆசிய நாடுகளின் பிரதிநிதிகள், இன்னும் ஆசியாவில் பணியாற்றும் முப்பதுக்கும் மேற்பட்ட சர்வதேச பொதுநிலையினர்க் கழகங்கள், திருச்சபை இயக்கங்கள், புதிய கிறிஸ்தவ சமூகங்கள் போன்றவற்றின் பிரதிநிதிகள் என ஏறக்குறைய நானூறு பொதுநிலை கத்தோலிக்கப் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். “ஆசியாவில் இன்று இயேசு கிறிஸ்துவை அறிவித்தல்” என்பது இம்மாநாட்டின் தலைப்பாகும்.

மேலும், தென்கொரிய அரசுத்தலைவர் Lee Myung Bak, இம்மாட்டிற்கு வழங்கிய செய்தியை கலாச்சார அமைச்சர் அம்மாநாட்டில் இப்புதனன்று வாசித்தார். கொரிய சமுதாயத்திற்கு கொரியக் கத்தோலிக்கத் திருச்சபை வழங்கி வரும் பக்குவமும் ஆன்மீக ஒப்புரவு ம் நிறைந்த சேவைகள் குறித்துப் பாராட்டியுள்ளார் அரசுத்தலைவர் லீ. இம்மாநாடு வருகிற ஞாயிறன்று நிறைவடையும்.








All the contents on this site are copyrighted ©.