2010-08-30 14:41:02

திருத்தந்தையின் ஞாயிறு மூவேளை ஜெப உரை


ஆகஸ்ட் 30, 2010. முதலானோர் கடைசியாவர் கடைசியானோர் முதலாவர் என்பது குறித்து இயேசு விளக்கிய இஞ்ஞாயிறு திருப்பலி வாசக உவமை குறித்து தன் ஞாயிறு மூவேளை ஜெப உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இயேசு கிறிஸ்துவும் உலகின் மிகத் தாழ்ச்சி நிறைந்த இடமான சிலுவையைத் தேர்ந்தெடுத்து அதன் வழி நம்மை மீட்டார் என்றார்.

தாழ்ச்சி மற்றும் சுயநலமின்மையின் எடுத்துக்காட்டாக இயேசுவை நோக்குவோம் என அழைப்பு விடுத்தத் திருத்தந்தை, சோதனைக் காலங்களில் பொறுமை காத்து, துன்ப வேளைகளில் இறைவனுக்கான தாழ்ச்சியுடன் அதனை ஏற்று, மேலான இடத்தை நமக்கு இறைவன் வழங்குவதற்குக் காத்திருப்போம் என்றார்.

இறைவனுக்கு மிக நெருக்கமாக இருப்பதே உண்மை நன்மைத்தனம் எனவும் கூறினார் பாப்பிறை.

இத்தாலிய ஆயர்களின் ஆதரவுடன் இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட 'படைப்பை பாதுகாத்தல் நாள்' குறித்தும் ஞாயிறு மூவேளை ஜெப உரையின் இறுதியில் எடுத்துரைத்த திருத்தந்தை, +சுற்றுச்சூழலுக்கான மதிப்பின்றி அமைதியைப் பெறமுடியாது என மீண்டுமொருமுறை நினைவூட்டினார். நாம் பெற்ற உலகை நம் அடுத்த தலைமுறைகளும் மாண்புடன் வாழ உதவும் வண்ணம் பாதுகாத்து வழங்கவேண்டியது நம் கடமை எனவும் கூறினார் பாப்பிறை.

சிலே நாட்டில் இம்மாதம் 5ந்தேதி முதல் சுரங்க இடிபாடுகளிடையே சிக்கித்தவிக்கும் 33 சுரங்கத் தொழிலாளர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்குமான சிறப்புச் செபங்களுக்கும் இம்மூவேளைச் செப உரையின் போது உறுதி கூறினார் பாப்பிறை.

இதற்கிடையே, வட சிலேயின் சான் ஹோஸே சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள 33 தொழிலாளர்களையும் மீட்கும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்ற போதிலும், அவர்களை வெளிக்கொணர குறைந்த பட்சம் மூன்று மாதங்கள் வரை ஆகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.