2010-08-30 16:02:17

அனைத்துலக காணாமற்போனோர் தினம் ஆகஸ்ட் 30


ஆக.30,2010. தொலைக்காட்சிகளில் சில நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது நம்மையும் அறியாமல் நம் கண்களில் வழியும் நீரைத் துடைத்துக் கொள்கிறோம். அண்மையில் நான் பார்த்த நிகழ்ச்சி ஒன்றில் நியூயார்க்கைச் சேர்ந்த விக்கி ரோரிங் என்ற 63 வயதுத் தாய், தனது மகன் ஸ்காட், மகள் கேரன் மற்றும் தனது பேரப்பிள்ளைகளைக் கட்டி அணைத்து முத்தமழை பொழிந்து கொண்டிருந்தாள். 34 ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருந்த மகளையும் மகனையும் மீண்டும் உயிரோடு பார்க்கும் போது ஆனந்தக் கண்ணீர் வராமல் என்ன செய்யும்? இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் திரையில் வந்தான் டாம் என்ற எட்டு வயதுச் சிறுவன். அவன் மிகுந்த சோகமாகக் காணப்பட்டான். ஏனெனில் அவனின் சகோதரன் மத்தேயு திடீரெனக் காணாமற்போய் விட்டான். மத்தேயு இல்லாமல் என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை என்றான் டாம். கடந்தவாரச் செய்திகளில் சிவற்றையும் கேளுங்கள்.

வடஅமெரிக்க நாடான மெக்சிகோவில் கடந்த புதன்கிழமையிலிருந்து Roberto Suarez என்ற முக்கிய புலன் விசாரணை அதிகாரியும் அவரோடு பயணம் செய்த உள்ளூர் காவல்துறையாளர் ஒருவரும் காணாமற்போயுள்ளனர். கடந்த செவ்வாயன்று மெக்சிகோவின் சான் பெர்னாண்டோவுக்கு அருகில் குண்டுகள் துளைக்கப்பட்ட 72 பேரின் உடல்களை முதலில் பார்த்தவர் இந்த சுவாரெஸ். அமெரிக்க ஐக்கிய நாட்டில் வேலை தேடிச் செல்வதற்காகக் காத்திருந்த மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த இவர்களைப் போதைப்பொருள் வியாபாரிகள் கடத்திக் கொலை செய்துள்ளனர் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன. ஈராக்கின் மொசூல் நகரைச் சேர்ந்த 35 வயதாகும் Louyaé Behnam என்ற கத்தோலிக்கர் கடந்த புதனன்று இசுலாம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். அவரது குடும்பம் 15,000 அமெரிக்க டாலரைப் பிணையல் தொகையாகச் செலுத்திய பின்னரும்கூட அவர் கொலைச் செய்யப்பட்டுள்ளார். அவரது உடலை உறவினர்கள் இச்சனிக்கிழமையன்று பெற்றிருக்கின்றனர். "ரம்ஜான் புனித மாதத்தில் ஒரு கிறிஸ்தவரைக் கொலை செய்வது கடவுள் முன்னிலையில் தகுதியான செயல்” என்று இசுலாம் தீவிரவாதிகள் கருதுவதாக ஓர் ஊடகச் செய்தியில் வாசித்தோம்.

அன்பு நேயர்களே, உலகில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாட்டிலும் எத்தனையோ பேர் காணாமற்போய்க் கொண்டிருக்கின்றனர். வேலைக்குச் சென்ற தந்தை திரும்பி வருவதில்லை. அடுத்த நாள் பிணையல் தொகை கேட்டு மிரட்டல் தொலைபேசி அழைப்பு வருகிறது. அந்த வீட்டில் இளைஞன் தூங்கிக் கொண்டிருக்கிறான். திடீரெனத் துப்பாக்கியுடன் சிலர் வந்து அழைத்துச் செல்கின்றனர். பின்னர் அவன் திரும்பி வருவதே இல்லை. அவனுக்கு என்ன ஆயிற்று? யாருக்குமே தெரிவதில்லை. இவ்வாறு ஆண்டுதோறும் 2,50,000 பேர் காணாமற்போகின்றனர் மற்றும் வீட்டைவிட்டு ஓடி விடுகின்றனர் என்று காணாமற்போவோரைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்கும் ஒரு வலைத்தளம் கூறுகிறது. சில நேரங்களில் கடத்தப்படுவோரும் காணாமற்போவோரும் திரும்பி வருகின்றனர். பல நாட்கள் கழித்து, சில சமயங்களில் சில ஆண்டுகள் கழித்து அவர்கள் திரும்பி வரும்பொழுது குடும்பங்களும் ஊரும் நாடும் சேர்ந்து கொண்டாடுகின்றன. கடந்த 19ம் தேதி புதுச்சேரிக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற கடலூர் மீனவர்கள் ஐந்து பேர் காணாமல் போய்விட்டனர். அவர்கள் இருக்குமிடம் தெரியாமல் உறவுகள் தவித்தன. ஆயினும் பத்து நாட்களுக்குப் பின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இஞ்ஞாயிறன்று கரையேறியிருக்கின்றனர். இவ்வாறு எப்பொழுதும் நடப்பதில்லையே.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் 2005ம் ஆண்டின் இறுதிவரை ஒரு இலட்சத்து 9,531 பேர் காணாமற்போயுள்ளனர். இவர்களில் 53.03 விழுக்காட்டினர் 18 வயதுக்குட்பட்ட சிறார். கனடாவில் 2007ம் ஆண்டின் நிலவரப்படி 60,582 சிறார் காணாமற்போயுள்ளனர். இப்படி ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு புள்ளிவிபரம் இருக்கின்றது. மக்கள் ஏன்? எப்படி? எதற்காகக் காணாமற்போகின்றனர்? வீட்டில் பிரச்சனை, குடும்பத்தில் வன்முறை, மனச்சோர்வு, மனஅழுத்தம், கையறுநிலை, தவறாகப் பயன்படுத்தப்படுதல், பணநெருக்கடி, கடன் தொல்லை, மகிழ்ச்சியற்ற வாழ்க்கை, பழிவாங்குதல், காதல், விருப்பமில்லாத் திருமணம், நரபலி, கப்பம் பெறுதல், உடல் உறுப்புக்களைத் திருடுதல், பாலியல் வியாபாரம், இன்னும் சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் - இவ்வாறு பல காரணங்கள் இருக்கின்றன. குழந்தைகளைக் கடத்தி வந்து இராணுவத்தில் சேர்ப்பதும் ஆலைகளிலும் சிறு வர்த்தக நிறுவனங்களிலும் வேலை செய்யுமாறு நிர்பந்திப்பதும் நடக்கின்றன. இதனை “நவீனகால அடிமைத்தனம்" என்று குறிப்பிடுகின்றனர். இந்தியாவில் 2007ஆம் ஆண்டில் மட்டும் இரண்டு இலட்சம் பெண்கள் பாலியல் தொழில் மற்றும் ஒப்பந்தத் தொழிலுக்காக வெளி மாநிலங்களுக்குக் கடத்தப்பட்டுள்ளனர்.

இந்த மாதிரியான காரணங்கள் ஒருபுறம் இருந்தாலும், வலுக்கட்டாயமாகக் காணாமற்போகின்றவர்களும் இருக்கின்றார்கள். போர் நடக்கும் இடங்களில், போர்க் காலங்களில் எண்ணிக்கையற்றோர் கட்டாயமாகக் காணாமற்போகின்றனர். உலகில் இந்தக் காணாமற்போகின்றவர் பட்டியலை அதிகமாகக் கொண்டிருக்கும் நாடு ஈராக். அதற்கு அடுத்த நிலையில் இருப்பது இலங்கை என்று சொல்லப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அறிக்கையின்படி, இலங்கையில் 1980ம் ஆண்டிலிருந்து பன்னிரண்டாயிரம் பேர் காணாமற்போயுள்ளனர். எனினும் இவ்வெண்ணிக்கை பதினேழாயிரத்துக்கு அதிகம் என்றும் கூறப்படுகின்றது. இவர்கள் இலங்கையில் பாதுகாப்புப் படைகளால் கைது செய்யப்பட்ட பின்னர் காணாமற்போயிருப்பவர்கள். ஈராக்கில் 16,384 பேர் காணாமற்போயுள்ளனர். குரோவேஷியா, போஸ்னியா, கொசோவோ போன்ற மேற்கு பால்கன் நாடுகளில் 1991லிருந்து 1999 வரை இடம் பெற்ற போர்களில் ஏறக்குறைய 15,000 பேர் காணாமற்போயுள்ளனர். நேபாளத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக இடம் பெற்ற ஆயுதம் தாங்கியச் சண்டையில் சுமார் ஆயிரம் பேர் காணாமற்போயுள்ளனர்.

உலக வரலாற்றை நோக்கும் பொழுது இந்தக் காணாமற்போதல் பிரச்சனை இக்காலத்தில் மட்டும் நடப்பதாகச் சொல்ல முடியவில்லை. ஒரு வலைதளத்தில் சுமார் 834ம் ஆண்டு முதல் இந்நாள்வரை காணாமற்போயுள்ளவர்களின் பெயர்கள் முழுவிவரங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன. முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் போது இலட்சக்கணக்கானோர் காணாமற்போயுள்ளனர். இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் கொடூரமான நடவடிக்கையின் காரணமாக யூத இனத்தவர் மட்டுமே பத்து இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமற்போயுள்ளனர். இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் சுவீடனைச் சேர்ந்த வொலண்பேக் என்பவர் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட காணாமற்போனோரை மீட்டுள்ளதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இவர் இருபதாம் நூற்றாண்டில் தலைசிறந்த மனிதாபிமானி என வர்ணிக்கப்படுபவர். 1945 ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி வொலண்பேக் இரஷ்யப் படையினால் கைது செய்யப்பட்டார். இவரின் கைதையடுத்து இவருக்கு என்னவானது என்பது இன்னும் உலகிற்கு மர்மமாகவே உள்ளது.

எனவே. இலத்தீன் அமெரிக்காவில் இரகசியமான முறையில் கைது செய்யப்படலை எதிர்த்து 1981ம் ஆண்டு மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிக்காவில் “கைதாகிக் காணாமற்போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு” (Federation of Associations for Relatives of the Detained-Disappeared, FEDEFAM) என்ற அரசு சார்பற்ற அமைப்பு தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து "மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு", பன்னாட்டுச் செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கம், ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் போன்ற அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் போன்றவையும் இந்த இரகசியக் கைதுகளுக்கு எதிராக அதிக அக்கறை கொண்டு செயல்படுகின்றன. மனிதாபிமானத்தை மீறி காணாமற்போவோர் குறித்த செயல் இடம் பெற்றாலும் மனிதாபிமானச் சிந்தனையுடன் இதன் விளைவுகளை நோக்க வேண்டியது நமது கடமையாகும். இதனால் ஐக்கிய நாடுகள் நிறுவன் ஆகஸ்ட் 30ம் தேதியை அனைத்துலக காணாமற்போனோர் தினம் எனக் கடைபிடிக்கிறது.

சவுதி அரேபியாவில் வீட்டு வேலை செய்த எல்.ஜீ.ஆரியவதி என்ற இலங்கைத் தாய்க்கு நேர்ந்த கொடுமைகள் கடந்த வார ஊடகச் செய்திகளில் தவறாமல் இடம் பெற்றிருந்தன. எனக்கு வேலை அதிகம் என்ற சொன்ன ஒரே காரணத்திற்காக அந்த வீட்டு உரிமையாளர்கள் ஆரியவதியின் உடலில் 23 ஆணிகளை சூடேற்றிக் செலுத்தியிருக்கிறார்கள். இன்று இலங்கையில் அவரது உடலிலிருந்து சுமார் இரண்டு அங்குலம் நீளமான 13 ஆணிகளும் 5 ஊசிகளும் அகற்றப்பட்டுள்ளன. இன்னும் ஆறு ஆணிகள் இந்தப் பெண்ணின் கைகளிலிருந்து அகற்றப்படாதிருக்கின்றன. அவற்றை அகற்றுவதால் பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இப்படி பல சித்ரவதைகளைப் பலர் எதிர்கொள்கின்றனர்.

அன்பர்களே, இந்த அனைத்துலகக் காணாமற்போனோர் தினத்தின் இறுதியில் இந்த நிகழ்ச்சி உங்களை வந்தடைகிறது. இருந்தபோதிலும் காணாமற்போவோர் பற்றியும் அவர்களது குடும்பத்தினர் அனுபவிக்கும் வேதனைகள் பற்றியும் நினைக்கும் பொழுது இந்தக் குடும்பங்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதா? அத்துடன் இதேமாதிரியான நிலை எனது குடும்பத்தில் வராமல் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் உதிக்கின்றதா? சில நல்ல காரியங்களை மறப்பது மக்களின் இயல்பாக இன்று மாறி வருகிறதாம். எனவே அவற்றை நினைவுபடுத்தித் தூண்டிக்கொண்டே இருப்பது நமது கடமை எனக் கொள்வோமா!.

பல காரணங்களால் காணாமற்போவோர் குறித்துப் பார்த்தோம். நம் மத்தியில் தமது பிரசன்னத்தால் எப்பொழுதும் நம்மை வழிநடத்திவரும் கடவுள் திடீரெனக் காணாமற்போய்விட்டால் எப்படியிருக்கும்? இதேமாதிரி சிந்தித்த ஒருவர் சொல்கிறார் – நமது அகவாழ்க்கையில் வெறுமை இருக்கும். வாழ்க்கை அர்த்தமற்றுக். கொடுமையாகத் தெரியும். செபம் செய்வதற்குக் காரணமே இருக்காது. மலேரியா எய்ட்ஸ் போன்ற நோயாளிகளுக்கு எந்த உதவிக்கரமும் நீளாது. மனிதாபிமானச் செயல்கள் மரணித்துப் போய்விடும். யாரும் யாருக்கும் உதவ முன்வரமாட்டார்கள் என்று.

மனித மனங்களில் மனிதநேயம் அற்றுப் போவதாலேயே, கல்லைவிட கடின இதயம் உள்ளவர்களாலேயே பலர் காணாமற்போகின்றனர். முல்லைக்குத் தேர் தந்தவனும், புறாவிற்குத் தசை தந்தவனும் வாழ்ந்த மண்ணின் மைந்தர்கள் நாம். எனவே அவர்கள் வளர்த்த மனிதநேயம் மூச்சிழந்து போகாதபடி வாழ்வோம். இன்றைக்கு நாம் வாழ்வதுதான் வாழ்க்கை. எனவே இன்றே மனிதநேயத்துக்கு உயிர் கொடுப்போம்.








All the contents on this site are copyrighted ©.