2010-08-28 15:50:16

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
உணவு மனிதர்களின் அடிப்படை தேவை. சொல்லப்போனால், உணவு எல்லா உயிர்களுக்கும் அடிப்படை தேவை. உணவு உண்பதென்பது மனிதர்கள் மத்தியில் பொதுவாக குழுவில் நடக்கும் ஒரு செயல். மிருகங்களும் கூடி வந்து உண்பதுண்டு. பாவம், தாவரங்கள்... அவை தனித்து வேரூன்றி நின்று தினமும் உணவு உண்பது இயற்கை வகுத்த நியதி. தனித்துண்ணும் தாவரங்களைப் போல் மனிதர்களும் மாறிவரும் நிலை மனத்தைக் கஷ்டப்படுத்துகிறது. இன்றைய துரித உலகில், ஆங்காங்கே முளைத்திருக்கும் துரித உணவகங்களில் இப்படித்தான் நம்மில் பலர் நின்றபடியே அவசர அவசரமாக உணவை முடிக்கும் காட்சிகள் பெருகி வருகின்றன.
குழுவாக, குடும்பமாக அமர்ந்து உணவு உண்பது பொருள் நிறைந்த ஒரு செயல். "A family that prays together, stays together." அதாவது, சேர்ந்து செபிக்கும் குடும்பம் சேர்ந்து வாழும், என்று என்று சொல்லி முன்பு குடும்ப செபங்களை வலியுறுத்தினோம். நாம் வாழும் இந்த காலத்தில் சேர்ந்து உண்ணும் குடும்பம் சேர்ந்து வாழும் என்பதை வலியுறுத்த வேண்டியுள்ளது. இரவும் பகலும் உழைக்க வேண்டிய சூழலில், சேர்ந்து வாழ்வது, சேர்ந்து உண்பது காண்பதற்கு அரிதான ஒரு பழக்கமாகி வருகிறது. அப்படியே குடும்பத்தினர் சேர்ந்து உண்ணும் போதும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தபடியே உண்ணும் பழக்கம் நம் குடும்பங்களில் இன்று அதிகமாகி உள்ளது. மரம் செடிகளைப் போல் தனித்து நின்று துரிதமாக உணவை உண்பது, தொலைக்காட்சி பெட்டிக்கு முன் அமர்ந்து உண்பது இவைகளால் ஏற்படும் பின் விளைவுகளால் உடல் நல, மன நல மருத்துவர்களுக்குத் தரும் தொகை அதிகமாகி வருகிறது.

சேர்ந்துண்பதைப் பற்றி பேசும்போது, நாம் கலந்து கொள்ளும் விருந்துகள் பற்றியும் சிந்திக்கலாம். விருந்தென்று வந்து விட்டால், விருந்து பரிமாறுவதில், விருந்து உண்பதில் எத்தனையோ வழி முறைகள், விதி முறைகள்... ஒவ்வொரு நாட்டிலும் ஒரு பழக்கம், வழி முறை உண்டு. பொதுவாகவே, மிகப்பெரும் செலவில், மிக உயர்ந்த முறையில் நடத்தப்படும் விருந்துகளில் உணவு உண்பதை விட, அங்கு கடைபிடிக்கப்படும் வழிமுறைகள், சாத்திர சம்பிரதாயங்கள் அதிக அளவில் இருக்கும். அந்த விருந்துகளில் எதை எதை எந்தெந்த நேரங்களில் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் முன்கூட்டியே தெரிந்து கொண்டு விருந்துக்குச் செல்ல வேண்டும், இல்லையேல் அவமானப்பட வேண்டியிருக்கும்.
குரு என்ற முறையில், ஆசிரியர் என்ற முறையில் பல விருந்துகளுக்குப் போயிருக்கிறேன். சாதாரண, எளிய குடும்பங்களில் எந்தவித சடங்கும், முறையும் இன்றி விருந்து உண்டு, மன நிறைவோடு வந்திருக்கிறேன். வசதிபடைத்த இடங்களில் விருந்துக்குப் போன போதெல்லாம், எதைச் செய்வது, எதைச் செய்யக் கூடாது, எதை எடுப்பது, எத்தனை முறை எடுப்பது என்று கணக்குப் போடுவதிலேயே விருந்து நேரம் முழுவதையும் கழித்திருக்கிறேன்.
விருந்து பரிமாறப்படும் மேசையில் வைக்கப்பட்டிருக்கும் துணி, கத்தி, கரண்டி இவைகளைப் பயன்படுத்துவதில் ஆரம்பித்து, பல வழிமுறைகள் பல சாத்திரங்கள் அங்கே கடைபிடிக்கப்பட வேண்டும். சரியாகத் தெரியவில்லை எனில், அடுத்தவர் எப்படி செய்கிறார் என்று பார்த்து, பார்த்து செய்து... அப்பப்பா... அந்த விருந்துக்கு ஏன் வந்தோம், எப்போது அங்கிருந்து கிளம்பலாம் என்று எண்ணிய நேரங்களும் உண்டு. பெரும்பாலான நேரங்களில் இந்த விருந்துகளிலிருந்து திரும்பிச் செல்லும் போது வயிறும் நிறைந்திருக்காது, மனதும் நிறைந்திருக்காது.

விருந்தைப் பற்றி ஏன் இவ்வளவு விளக்கம்? இன்றைய நற்செய்தியில் இயேசு கலந்துகொண்ட ஒரு விருந்தைப் பற்றி, அந்த விருந்து நேரத்தில் இயேசு சொல்லித் தந்த பாடங்களைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. ஒய்வு நாள் ஒன்றில், இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார்... இன்றைய நற்செய்தி இப்படி ஆரம்பமாகிறது. இது சாதாரண விருந்து அல்ல. ஒரு பரிசோதனை விருந்து. இயேசுவைச் சோதிக்கக் கொடுக்கப்பட்ட ஒரு விருந்து.
யூத விருந்து முறைகளில் பல சடங்குகள் உண்டு. வீட்டிற்குள் நுழைவதற்கு முன் தங்களையே சுத்தமாக்கும் சடங்கு. உள்ளே சென்றதும் ஒருவர் ஒருவரை வாழ்த்தும் சடங்கு... விருந்துக்கு முன், விருந்து நேரத்தில், விருந்து முடிந்ததும்... என்று ஒவ்வொரு நேரத்திற்கும் குறிக்கப்பட்டச் சடங்குகள் பல உள்ளன. இவைகளுக்கு மேலாக, இந்த விருந்து நடந்தது ஓர் ஒய்வு நாள் என்பதால் சடங்குகள் கூடுதலாக இருந்திருக்கலாம்.
இயேசு இவைகளை எல்லாம் அறிந்திருந்தாரா? சரிவரத் தெரியவில்லை. இயேசு பிறந்தது, வளர்ந்தது எல்லாம் ஒரு சிறு கிராமத்தில், ஓர் எளிய குடும்பத்தில்... முறையான கல்வி பெற்றாரா? அதுவும் தெரியாது. படித்தவர்களுடன் பழகினாரா? அதுவும் சந்தேகம் தான். படிக்காதவர்கள், பாமரர்கள், பாவிகள் என்று மேட்டுக் குடியினரால் ஒதுக்கப்பட்டவர்கள்... இவர்களே இயேசுவுடன் நெருங்கிப் பழகியவர்கள். அர்த்தமற்ற சாத்திர சம்பிரதாயங்கள் இயேசுவுக்குப் பிடிக்காது என்பதும் நமக்குத் தெரிந்ததே. இப்படி சுதந்திரமாக வளர்ந்தவரை, மற்றவர்களை வளர்க்க நினைத்தவரை, பரிசேயர் தலைவர் விருந்துண்ண அழைத்திருந்தார். நற்செய்தியில் வரும் அடுத்த வரி, அந்த விருந்தின் உள் நோக்கத்தை நமக்குப் புரிய வைக்கின்றது. "அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர்."
சூழ்ந்திருந்தவர்களின் கவனத்தை ஈர்ப்பது இயேசுவுக்குப் புதிய அனுபவம் இல்லை. அவர் சென்ற இடங்களிலெல்லாம் இதுபோல் நடந்தது. சாதாரண, எளிய மக்கள் இயேசுவை சுற்றி வந்து அவரைக் கூர்ந்து கவனித்தனர். அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் உள் வாங்க, அவரது ஒவ்வொரு செயலையும் கண்டு பிரமிக்க, பின் பற்ற மக்கள் எப்போதும் அவரைக் கவனித்து வந்தனர்.
அந்த எளிய மக்கள் கூர்ந்து கவனித்ததற்கும், இப்போது இந்த பரிசேயர் வீட்டில் இயேசுவைச் சுற்றி அமர்ந்திருந்தவர்கள் அவரைக் கூர்ந்து கவனிப்பதற்கும் ஏகப்பட்ட வேறுபாடு... மலைக்கும், மடுவுக்கும் உள்ள வேறுபாடு. எளியோர் கவனித்தது இயேசுவுக்கு இதமாக, மகிழ்வாக இருந்திருக்கும். பரிசேயர் கும்பல் அவரைக் கவனித்தது இயேசுவுக்குச் சங்கடமாக இருந்திருக்கும்.

இப்படி ஒரு சூழலில் நான் இருந்தால் என்ன செய்வேன்? அம்புகளாய் என்னைத் துளைக்கும் பார்வைகள் என்னைச் சுற்றிலும் இருந்தால், அந்த இடத்தில் ஓடி ஒளிய இடம் தேடுவேன். முடிந்த வரை அந்தச் சூழலில் எந்தத் தவறும் செய்துவிடக் கூடாது என்பதிலேயே என் கவனம் இருக்கும். எதையும் சொல்வதற்கு, செய்வதற்குத் தயங்குவேன். எவ்வளவு விரைவில் அந்த இடத்தை விட்டு வெளியேற முடியுமோ, அவ்வளவு விரைவில் வெளியேறுவேன்.
இயேசு என்னைப்போன்றவர் இல்லை. அசாத்தியத் துணிச்சல் அவரிடம் இருந்தது. இயேசுவின் துணிச்சல் உள் மனதின் பயங்களை மூடுவதற்குப் போடப்பட்ட முகமூடி அல்ல. இறைதந்தை மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கை, உண்மை மீது அவருக்கிருந்த பற்று இவைகளின் வெளிப்பாடாக வந்த துணிச்சல் அது.
எனவேதான், அந்தப் பரிசேயர் வீட்டில், சூழ இருந்தவர்கள் அனைவரும் தன்னைக் கூர்ந்து கவனிக்கிறார்கள் என்று தெரிந்தும், தன் மனதில் எழுந்த கருத்துக்களைத் தெளிவாகக் கூறினார். அவரது முதல் கருத்து விருந்துக்கு வந்திருந்த விருந்தாளிகளுக்கு... இரண்டாவது கருத்து விருந்தை ஏற்பாடு செய்திருந்த பரிசேயர் தலைவருக்கு...
நமது எண்ண ஓட்டங்களின்படி பார்த்தால், இயேசுவுக்கு இது வேண்டாத வேலை என்பதுபோல் தெரியும். விருந்துக்குப் போனோமா, சாப்பிட்டோமா, வந்தோமா என்று இல்லாமல், இது ஏன் என்ற கேள்வி எழும். குறை கண்ட இடத்தில், அந்தக் குறையையும் தன் விருந்தோடு சேர்ந்து விழுங்காமல், அதைக் கூறினார்.
லூக்கா 14: 7-11
விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்து கொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை: ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களைவிட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், ‘இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்’' என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், ‘நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்எனச் சொல்லும்பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள். தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்.” 
இயேசுவின் இந்த பாடத்தைக் கேட்கும் போதெல்லாம் எனக்குள் ஒரு சிந்தனை ஓடும். நான் ஒரு விருந்துக்குப் போகிறேன். விருந்தரங்கத்தில் நுழைந்ததும், "கடைசி இடத்தில் அமருங்கள்" என்று இயேசு சொன்னது என் காதில் ஒலிக்கிறது. கடைசி இருக்கைக்குப் போகிறேன். ஆனால், மனதுக்குள் ஓர் ஏக்கம், எதிர்பார்ப்புடன் அந்த இருக்கையில் சென்று அமர்கிறேன். விருந்துக்கு என்னை அழைத்தவர் நான் கடைசி இடத்தில் அமர்ந்திருப்பதை எப்படியாவது பார்த்து விடுவார், பலருக்கு முன் அங்கு வந்து, உயர்ந்த இடத்திற்கு என்னை அழைத்துச் செல்வார் என்ற எதிர்பார்ப்பு அது. விருந்து ஆரம்பமாகிறது. பலரையும் வாழ்த்தியபடியே வீட்டுத் தலைவர் வருகிறார். என் எதிர்பார்ப்பு அதிகமாகிறது. என்னையும் வந்து வாழ்த்துகிறார்... அதற்குப் பிறகு... அவ்வளவுதான்... மற்றபடி "நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்." என்ற அழைப்பு அவரிடம் இருந்து வரவில்லை. என் மனம் உடைந்து போகிறது. என்னுடைய தாழ்ச்சி அர்த்தமற்று போகிறது.
இயேசு கூறிய தாழ்ச்சி இதுவல்ல. முதலிடம் கிடைக்கும் என்ற ஏக்கத்தோடு, எதிர்பார்ப்போடு கடைசி இடத்திற்குச் செல்லுங்கள் என்று அவர் சொல்லவில்லை. அப்படி போவது, இயேசுவைப் பொறுத்தவரை தாழ்ச்சியே இல்லை. தாழ்ச்சி என்ற பெயரில் நடத்தப்பட்ட நாடகம். உயர் குடி மக்களின் விருந்தில் மருந்துக்கும் காண முடியாத பணிவைப் பற்றி இயேசு கூறும் துணிவான, தெளிவான பாடம் இது.

இயேசுவின் அடுத்த பாடம் அந்த விருந்தை ஏற்பாடு செய்திருந்த பரிசேயர் தலைவருக்கு. இது உண்மையிலேயே மிக அதிகமான துணிச்சல்.
பணக்காரர்கள் நடத்தும் விருந்துகளில் கணக்குகள் நிரம்பி வழியும். யார் யாரை அழைக்க வேண்டும், யார் யாருக்கு எந்தெந்த இருக்கைகள், எத்தனை வகை மது பானங்கள், உணவு வகைகள்... இப்படி விருந்து கொடுப்பவரின் கணக்கு மிக நீண்டதாக இருக்கும். விருந்துக்கு போகிறவர்களின் கணக்கு வேறுபட்டிருக்கும்... என்ன உடுத்துவது, என்ன பரிசு தருவது, எவ்வளவு சாப்பிடுவது, யார் யாரைச் சந்திப்பது, யார் யாரைக் கண்டும் காணமல் போவது... இப்படி இந்தக் கணக்குகள் ஓடும். இப்படி எல்லாவற்றையும் கணக்குப் பார்க்கும் அந்தக் கூட்டத்தில் செயற்கைத் தனம் மிக அதிகமாகத் தெரியும்.
ஒரு சில விருந்துகளில் மது அதிகமாகி, மதி குறைந்து போகும். அன்பர்களே, இன்று ஆகஸ்ட் 29 திருமுழுக்கு யோவான் தலை வெட்டுண்டு உயிர் துறந்த திருநாள். ஏரோது என்ற அரசன் நடத்திய விருந்து, அங்கு நடந்த நடனம், அந்த நடனத்திற்குப் பரிசாக இயேசுவின் முன்னோடியான திருமுழுக்கு யோவானின் தலை வெட்டப்பட்டு, ஒரு தட்டில் பரிசாக அளிக்கப்பட்டது எல்லாம் ஒவ்வொரு விருந்துக்கும் இயேசு சென்ற போதெல்லாம் அவர் மனதில் நிழலாடியிருக்கும். இப்படிப்பட்ட செயற்கைத் தனமான, அல்லது, வரம்புகளை மீறும் விருந்துகளுக்கு ஒரு மாற்று மருந்தாக இயேசு கூறும் விருந்து இது. எந்தக் கணக்கும் பார்க்காமல், எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் தரப்படும் விருந்து அது.

லூக்கா 14: 12-14
பிறகு தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, “நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும் போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும். மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறு பெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்என்று கூறினார்.







All the contents on this site are copyrighted ©.