2010-08-28 15:53:02

ஐ.நா.பொதுச் செயலர் - அணுப்பரிசோதனைத் தடை உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த அழைப்பு


ஆக.28,2010. உலகில் அணுப்பரிசோதனைகளைத் தடைசெய்யும் உடன்படிக்கையை இந்நாள்வரை அமல்படுத்தாத ஐ.நா.வின் உறுப்பு நாடுகள் விரைவில் அதனை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்

இவ்வுடன்படிக்கையை அமல்படுத்துவதன் மூலம் உலகை அணுஆயுதங்கள் அற்ற இடமாக அமைக்க முடியும் என்றும் அணுப்பரிசோதனை தடை ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதில் இந்த 2010ம் ஆண்டில் நல்ல முன்னேற்றம் தெரிகின்றது என்றும் பான் கி மூன் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 29ம் தேதி இஞ்ஞாயிறன்று அணுப்பரிசோதனைக்கு எதிரான முதல் சர்வதேச நாள் கடைபிடிக்கப்படுவதையொட்டி செய்தி வெளியிட்ட பான் கி மூன் இவ்வாறு கூறியுள்ளார்.

அணுப்பரவல் தடை குறித்த உடன்பாட்டை பரிசீலனை செய்வதற்கென நடைபெற்ற உலகக் கருத்தரங்கு, உலகில் அணுஆயுதங்கள் அதிகரிப்பது நிறுத்தப்படுமாறு வருந்திக் கேட்டுள்ளது என்றும் அச்செய்தியில் மூன் கூறியுள்ளார்.

இந்த அணுப் பரிசோதனைத் தடை உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள 182 நாடுகளில் 153 நாடுகள் அதனை அமல்படுத்தியுள்ளன. இந்த உடன்படிக்கை உலகஅளவில் அமலுக்கு வருமுன்னர், சீனா, வடகொரியா, இந்தியா, இந்தோனேசியா, எகிப்து, ஈரான், இஸ்ரேல், பாகிஸ்தான், அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய ஒன்பது நாடுகள் இதில் கையெழுத்திட வேண்டும்.








All the contents on this site are copyrighted ©.