2010-08-26 15:32:16

பாகிஸ்தான் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனுப்பப்பட்டு வரும் உதவிகள் பற்றாது - கர்தினால் Cordes


ஆகஸ்ட் 26, 2010 பாகிஸ்தான் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு கோடி மக்களுக்கு அனுப்பப்பட்டு வரும் உதவிகள் பற்றாது என்று கர்தினால் ஒருவர் கூறியுள்ளார்.
‘Cor Unum’ என்ற திருப்பீடக் குழுவின் தலைவரான கர்தினால் Paul Josef Cordes இப்புதனன்று வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறியுள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு உதவிகள் செய்து வரும் காரித்தாஸ் அமைப்பிற்குத் திருத்தந்தை நன்கொடை அனுப்பியுள்ளார் என்றும் கர்தினால் Cordes தெரிவித்தார்.
நிதி உதவிகளும், பிற உதவிகளும் மிகவும் தேவை என்றாலும், இவை மட்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போதாது. அவர்கள் இழந்துள்ள பொருட்களை இன்னும் பிற வழிகளில் அவர்களால் பெற முடியும், ஆனால் அவர்கள் இழந்துள்ள உறவினர்களை எந்த ஒரு நிதி உதவியும் மீட்டு வர முடியாது, எனவே, அவர்களுக்கு மறு வாழ்வு குறித்த நம்பிக்கையையும் உருவாக்குவது அவசியம் என்று கர்தினால் Cordes வலியுறுத்தினார்.
இதற்கிடையே பாகிஸ்தானில் பணியாற்றி வரும் காரித்தாஸ் அமைப்பு, மூன்று மாதங்கள் என கணித்த தன் அவசர காலப் பணிகளை ஆறு மாதங்களுக்கு நீட்டித்திருப்பதால், தனது அவசர கால நிதி உதவியான 55 லட்சம் டாலர்களை இரட்டிப்பாக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது.பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியின் பரப்பு இங்கிலாந்தின் பரப்பளவை ஒத்தது என்றும், சிந்து நதியில் வெள்ளம் இன்னும் அதிகமாகி வருவதால், இந்த வார இறுதியில் வெள்ளத்தின் அளவு இன்னும் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் உள்ளன என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.