2010-08-26 15:33:12

கருவில் வளரும் உயிரின் திசுக்களைக் கொண்ட ஆய்வுக்காக மக்களின் வரிப்பணம் செலவு செய்யப்படுவதற்குத் தற்காலிகத் தடை - கர்தினால் திநார்தோ மகிழ்ச்சி


ஆகஸ்ட் 26, 2010 கருவில் வளரும் உயிரின் திசுக்களைக் கொண்ட ஆய்வுக்காக மக்களின் வரிப்பணம் செலவு செய்யப்படுவதைத் தற்காலிகமாகத் தடை செய்துள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டு நீதிபதி ஒருவரின் தீர்ப்பை அந்நாட்டு கர்தினால் ஒருவர் புகழ்ந்துள்ளார்.
Columbia மாநிலத்தின் உயர் நீதிபதியான Royce C.Lamberth, இச்செவ்வாயன்று வழங்கிய இந்தத் தடை, மனிதரின் பொது அறிவுக்கும், உயரிய மருத்துவ நன்னெறி விழுமியங்களுக்கும் கிடைத்த ஒரு வெற்றி என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் ஓர் அங்கமான வாழ்வை உறுதிப்படுத்தும் செயல்பாடுகள் குழுவின் தலைவரான கர்தினால் டேனியல் திநார்தோ (Daniel DiNardo) கூறினார்.
வளர்ந்து வரும் உயிரியல் மருத்துவ ஆய்வுகளுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு பெரும் தடையாக அமைந்துள்ளது என்று இந்த ஆய்வுகளை முன்னின்று நடத்தும் இயக்குனர் Francis S Collins ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.நீதிபதி Lamberth வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு, அரசை விழித்தெழச் செய்யும் ஒரு சவால் என்றும் மக்களின் வரிப்பணம் மனித உயிர்களை எல்லா வகையிலும் பேணி வளர்ப்பதற்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கர்தினால் திநார்தோ கூறினார்.







All the contents on this site are copyrighted ©.