2010-08-24 16:39:27

கிறிஸ்தவர்கள் அரசியலுக்கு அருகதையற்றவர்கள் என்ற இந்திய அரசியல்வாதியின் கூற்றுக்கு கிறிஸ்தவக் கூட்டமைப்பு கண்டனம்.


ஆகஸ்ட் 24, 2010. விவிலியத்தைப் படிப்பவர்கள் அரசியலுக்கு அருகதையற்றவர்கள் என ஆந்திராவைச் சேர்ந்த ராஜ்ய சபா அங்கத்தினர் ஹனுமந்த ராவ் பொதுப்படையாக அறிவித்தது குறித்து வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது ஆந்திர கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு.

கிறிஸ்தவர்கள் தங்கள் விவிலியத்தை வீட்டிற்குள் வைத்து வாசிக்க வேண்டும். அவர்களுக்கு அரசியலைப்பற்றி என்ன தெரியும் என இந்த மக்கள் பிரதிநிதி கேட்டுள்ளது தேசத்திற்கும், அரசியலமைப்பிற்கும் சிறுபான்மையினருக்கும் எதிரானச் செயல் எனக் குற்றஞ்சாட்டும் இக்கிறிஸ்தவக் கூட்டமைப்பு, காந்தி, நேரு, இந்திரா, சோனியா என அனைவரும் விவிலியத்தை வாசித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஓர் அங்கத்தினர் இவ்வாறு கூறியுள்ளது அதிர்ச்சி தரும் ஒன்றாக உள்ளது எனவும் கூறுகிறது.

விவிலியத்தைப் படிப்பவர்கள் அரசியலுக்கு அருகதையற்றவர்கள் எனக்கூறுவதன் மூலம் இந்நாட்டிற்காக அரசியல் மூலம் உழைத்த கிறிஸ்தவர்களை ராஜ்ய சபா உறுப்பினர் ஹனுமந்த ராவ் அவமானப்படுத்தியுள்ளார் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான தன் கோபத்தையும் விரோத மனப்பான்மையையுமே வெளிப்படுத்தியுள்ளார் எனவும் தெரிவிக்கிறது ஆந்திர கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு.








All the contents on this site are copyrighted ©.