2010-08-23 14:46:43

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்படி பாகிஸ்தான் கத்தோலிக்க ஆயர்கள் வேண்டுகோள்


ஆகஸ்ட் 23, 2010 பாகிஸ்தான் கத்தோலிக்க ஆயர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் படி எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாகிஸ்தானிலுள்ள அனைத்துக் கோவில்களிலும் இஞ்ஞாயிறன்று நடந்தத் திருப்பலிகளில் ஆயர்கள் அனுப்பிய இந்த வேண்டுகோள் வாசிக்கப்பட்டது. சமைக்கப்பட்ட உணவு, தங்குவதற்கான கூடார வசதிகள், காலரா, மற்றும் பிற நோய்களுக்கெதிராகக் கொடுக்க வேண்டிய மருந்துகள் ஆகியவற்றிற்கு அந்த ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நமது நாடு வரலாற்றில் இதுவரைக் கண்டிராத அளவு இயற்கை அழிவை சந்தித்துள்ளது. இந்த நேரத்தில் கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் நமது இஸ்லாமிய, இந்து சகோதர சகோதரிகள் அனைவரோடும் தோளோடு தோள் நின்று உதவ வேண்டும் என்றும், நம்மிடம் உள்ள வசதிகள் குறைவென்றாலும், அவற்றையும் பாதிக்கப்பட்டவர்களுடன் பகிர்வது கிறிஸ்தவ அழைப்பு என்றும் ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

ஆகஸ்ட் 24 இச்செவ்வாயன்று, செபத்திற்கென ஒதுக்கப்பட்ட ஒரு நாளென அழைப்பு விடுத்துள்ள ஆயர்கள், அன்று எல்லாக் கோவில்களிலும் சிறப்பு நற்கருணை வழிபாடுகள் நடத்த வேண்டுமென்றும் பரிந்துரைத்துள்ளனர்.

பள்ளி மாணவர்கள் தங்களால் முடிந்த அளவு பண உதவியும், பிற பொருள் உதவிகளும் செய்து வருவதாகக் கூறிய திருப்பீடப் பணிக் குழுவின் தேசிய இயக்குனர் அருள்தந்தை மாரியோ ரோட்ரிகுவேஸ், கராச்சி உயர்மறைமாவட்ட கத்தோலிக்கப் பள்ளிகளில் பணி புரியும் அனைத்து ஆசிரியர்களும் ஒரு நாள் ஊதியத்தை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.