2010-08-23 14:52:12

இரஷ்யாவின் தீ விபத்திற்கு கத்தோலிக்கத் திருச்சபையின் உதவிகள்


ஆகஸ்ட் 23, 2010 இரஷ்யாவில் அண்மையில் ஏற்பட்டப் பெருந்தீயின் அழிவிலிருந்து மக்களைக் காப்பாற்ற அங்குள்ள கத்தோலிக்கத் திருச்சபை பெருமளவில் உதவிகள் செய்துவருகின்றது.

இரஷ்யாவில் உள்ள காரித்தாஸ் அமைப்பு, ஜெர்மனி காரித்தாஸ் அமைப்புடன் சேர்ந்து இந்த மக்களுக்கு சுத்தமான குடிநீர், உணவு மற்றும் செல்லிடப் பேசி இவைகளை வழங்கி வருவதோடு, அடுத்துவரும் குளிர்காலத்தை எதிர்கொள்ள இம்மக்களுக்குத் தேவையானவைகளை வழங்கவும் திட்டங்களைத் தீட்டி வருகிறது.

மாஸ்கோவிற்கு கிழக்கே உள்ள வ்ளாடிமிர் பகுதியில் இந்தத் தீ விபத்தால் மிக அதிகமாய்ப் பாதிக்கப்பட்டுள்ள Yuzhny கிராமத்தில் கத்தோலிக்கத் திருச்சபை தன் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்தக் கிராமத்தில் வாழும் பலர் வயது முதிர்ந்தவர்கள் என்றும், மாற்றுத் திறனுடையோர் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

வ்ளாடிமிர் பகுதியில் உள்ள கத்தோலிக்கர்கள் வீடு வீடாகச் சென்று நிதித் திரட்டி வருவதாகக் கூறிய அங்குள்ளப் பங்குத் தந்தையரில் ஒருவரான அருள்தந்தை செர்கெய் சுயேவ் (Sergey Zuev), இப்பகுதியின் தேவைகள் ஓரளவு நிறைவேறியதும், அடுத்து, Ivanovo பகுதியில் தங்கள் முயற்சிகளை மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.