2010-08-23 14:45:24

அமைதியின் அரசியாம் அன்னை மரி குறித்த திருத்தந்தையின் மூவேளை ஜெப உரை.


ஆகஸ்ட் 23, 2010. இவ்வுலகை, குறிப்பாக பொருளற்ற வாதங்களுடன் வன்முறைகள் இடம்பெற்றுவரும் பகுதிகளை அமைதியின் அரசியாம் அன்னை மரியிடம் ஒப்படைப்பதாகக் கூறி இஞ்ஞாயிறு மூவேளை ஜெப உரையை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

உரோம் நகருக்கு வெளியே உள்ள காஸ்தல் கந்தோல்ஃபோ கோடை விடுமுறை இல்லத்திலிருந்து இஞ்ஞாயிறு மூவேளை ஜெப உரை வழங்கிய பாப்பிறை, எளிய உள்ளத்தோர் இறையரசில் நுழைவதற்கென இயேசுவால் திறக்கப்பட்ட குறுகிய வாயில் வழியே முதலில் நுழைந்த அன்னை மரி, இயேசுவின் அரசுத்தன்மையுடன் ஆன தொடர்பில் அரசியாக நோக்கப்படுகிறாள் என்றார்.

கிறிஸ்துவின் அன்னையாம் மரி, அரசியாக முடிசூட்டப்பட்டுள்ளதை கடந்த காலங்களின் ஓவியங்களிலும் எண்ணற்ற கலைவடிவங்களிலும் காணமுடியும் என்றார் பாப்பிறை.

கடைசியானோர் முதலாவர், முதலானோர் கடைசியாவர் என்ற இயேசுவின் வார்த்தைகள் அன்னைமரியில் முழுவதுமாக நிறைவேறிற்று என மேலும் கூறிய அவர், வலியோரைத் தாழ்த்தி எளியோரை இறைவன் உயர்த்தினார் என்ற விவிலிய உண்மைக்கான முழுமையான எடுத்துக்காட்டு அன்னை மரியே எனவும் எடுத்துரைத்தார்.

மேலும், பன்னாட்டு சகோதரத்துவம் குறித்து தங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்கவேண்டிய பெற்றோரின் கடமை குறித்து இம்மூவேளை செப உரையின் இறுதியில் வலியுறுத்தினார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.