2010-08-20 15:45:35

கிறிஸ்தவத்திற்கு எதிராகப் பேசிய அரசியல்வாதி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - இந்திய கத்தோலிக்கத் தலைவர்கள் வலியுறுத்தல்


ஆக.20,2010. இந்தியாவிலிருந்து கிறிஸ்தவத்தை வேருடன் பிடுங்கி எறிய வேண்டுமென்று பொதுப்படையாகவே மக்களைத் தூண்டியுள்ள அரசியல்வாதிக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கத்தோலிக்கத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பிரஹலாத் ரெமானி என்பவர் இந்தச் சுதந்திர தின விழாவன்று ஆற்றிய உரையில், கிறிஸ்தவத்தின் விதைகள் இந்தியாவில் பரவி வருவது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், இந்துக்கள் உட்பட எந்த மதத்தவராய் இருந்தாலும கிறிஸ்தவத்தை வேருடன் பிடுங்கி எறிய வேண்டும், கிறிஸ்தவ விதைகள் பரவினால் நாடு ஆபத்தை எதிர்நோக்கும் என்று பேசியுள்ளார்.

பிரஹலாத் ரெமானியின் இவ்வுரை குறித்து தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்த கர்நாடக ஆயர் பேரவைத் தலைவரான பெங்களூர் பேராயர் பெர்னார்டு மொராஸ், அரசு, இந்த அரசியல்வாதிக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுள்ளார்.

கிறிஸ்தவம், இந்தியாவின் இன்றியமையாத ஓர் அங்கமாக இருக்கின்றது, கிறிஸ்தவர்களின் தேசப்பற்றை யாரும் கேள்வி கேட்க முடியாது என்றும் பேராயர் மொராஸ் கூறியுள்ளார்.

மேலும், இவ்வியாழனன்று ரெமானியின் சொந்த ஊரான கனாப்பூரில் சுமார் 5,000 கிறிஸ்தவர்கள் கண்டன ஊர்வலம் நடத்தினர்.







All the contents on this site are copyrighted ©.